Paristamil Navigation Paristamil advert login

லஞ்சம் இன்றி 30 நாட்களில் பட்டா மாறுதல்: விண்ணப்பங்கள் அதிகரிப்பு

லஞ்சம் இன்றி 30 நாட்களில் பட்டா மாறுதல்: விண்ணப்பங்கள் அதிகரிப்பு

31 ஆவணி 2026 திங்கள் 10:56 | பார்வைகள் : 125


யாருக்கும் லஞ்சம் கொடுக்க வேண்டிய அவசியமின்றி, 30 நாட்களுக்குள் பட்டா மாறுதல் கிடைப்பதால், அதற்காக விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தில் வீடு அல்லது மனை வாங்கியவர்கள், பத்திரப்பதிவு முடிந்த பின்னர் பட்டா மாறுதலுக்காக தாலுகா அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பிக்கும் நடைமுறை இருந்து வந்தது. பின்னர், பொதுமக்கள் தாலுகா அலுவலகங்களுக்கு செல்லத் தேவையில்லை என்றும், 'இ - சேவை' மையங்கள் மூலமாகவே பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டது.

ஆனால், 'இ - சேவை' மையங்கள் வாயிலாக விண்ணப்பித்த பின்னரும், அவற்றை பரிசீலிக்கும் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் வருவாய் ஆய்வாளர்கள், விண்ணப்பதாரர்களை நேரில் அழைக்கும் நடைமுறை தொடர்ந்து வந்தது.

இதற்கு விண்ணப்பதாரர்கள் ஒத்துழைக்காத நிலையில், கூடுதல் விபரங்கள் கிடைக்கவில்லை எனக் கூறி, அவர்களின் விண்ணப்பங்களை 30வது நாளில் அதிகாரிகள் நிராகரிப்பது வழக்கமாக இருந்தது. இதனால், பொதுமக்கள் மீண்டும் மீண்டும் விண்ணப்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது.

இந்நிலையில், ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு, பட்டா மாறுதல் பணிகளை நிர்ணயிக்கப்பட்ட கால வரம்பிற்குள் முடிக்க வேண்டும் என வருவாய்த்துறை உத்தரவிட்டுள்ளது. இதன்படி, பட்டா மாறுதல் விண்ணப்பங்களை பரிசீலிக்கும் நடைமுறையிலும் சில மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன.

<b>இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:</b>

தமிழகத்தில் பத்திரப்பதிவு செய்யும் போது, சார் -பதிவாளர் அலுவலகம் மற்றும் 'இ - சேவை' மையங்கள் ஆகியவற்றின் வாயிலாக பொதுமக்கள் பட்டா மாறுதலுக்கு விண்ணப்பிக்கின்றனர். இந்த விண்ணப்பங்களை பரிசீலிக்கும் பணியில் தேவையற்ற தலையீடுகள் தற்போது தவிர்க்கப்பட்டுள்ளன.

கடந்த ஜூலை மாதத்தில், ஊரகப் பகுதிகளில் உட்பிரிவு உருவாக்கம் தேவையில்லாத 1.68 லட்சம் பட்டா மாறுதல் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் 1.31 லட்சம் விண்ணப்பங்கள் 30 நாட்களுக்குள் முடிக்கப்பட்டுள்ளன.

உட்பிரிவு உருவாக்கம் தேவைப்படும் வகையில் 1.71 லட்சம் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அவற்றில் 1.39 லட்சம் விண்ணப்பங்கள் முடிக்கப்பட்டு, பட்டா மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்களை நேரில் அழைக்கும் நடைமுறை தவிர்க்கப்பட்டுள்ளதால், லஞ்சம் எதுவும் கொடுக்காமல் பொதுமக்களுக்கு 30 நாட்களுக்குள் பட்டா மாறுதல் கிடைக்கிறது. இதன் காரணமாக புதிதாக பெறப்படும் விண்ணப்பங்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.

குறிப்பிட்ட ஒரு 'இ - சேவை' மையத்தின் முகவரியில் இருந்து வழக்கமாக தினமும் 200 விண்ணப்பங்கள் பதிவாகி வந்த நிலையில், தற்போது தினசரி 350 விண்ணப்பங்கள் பதிவாகின்றன. இவ்வாறு அவர் கூறினார்.

எழுத்துரு விளம்பரங்கள்