Paristamil Navigation Paristamil advert login

மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம்: தமிழக அரசு பரிசீலனை

மீனம்பாக்கம் விமான நிலையம் விரிவாக்கம்: தமிழக அரசு பரிசீலனை

31 ஆவணி 2026 திங்கள் 13:20 | பார்வைகள் : 114



பரந்தூர் பசுமைவெளி விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ள நிலையில், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. மேலும், பரந்தூர் திட்டத்திற்காக இதுவரை கையகப்படுத்தப்பட்டுள்ள நிலங்களை தொழில்துறை பயன்பாட்டுக்கு பயன்படுத்தவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது.

முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான த.வெ.க., ஆட்சி அமைந்த பிறகு, பல்வேறு திட்டங்கள் தொடர்பாக பொதுமக்களிடையே எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

பரந்தூர் விமான நிலையம்

காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரில் விமான நிலையம் அமைப்பதற்கான நடவடிக்கைகள், கடந்த தி.மு.க., ஆட்சியில் மேற்கொள்ளப்பட்டன. இதற்காக ஏராளமான நிலங்கள் அரசால் கையகப்படுத்தப்பட்டதுடன், விவசாயிகளுக்கு இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது.

எனினும், விவசாயிகள், அப்பகுதி மக்கள் மற்றும் சுற்றுச்சூழல் அமைப்புகள் தொடர்ந்து இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.

சட்டப்பேரவையில் விவாதம்

பரந்தூர் பகுதி மக்களுக்கு ஆதரவு தெரிவித்து விஜய் அங்கு செல்ல முயன்றது பெரும் கவனத்தை ஈர்த்தது. இதைத்தொடர்ந்து, சட்டப்பேரவையில் நடைபெற்ற மானியக் கோரிக்கை விவாதத்தின்போது, பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படுவதாக முதல்-அமைச்சர் விஜய் அறிவித்தார்.

இந்த அறிவிப்பு சட்டப்பேரவையில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு தி.மு.க., கடும் எதிர்ப்பு தெரிவித்ததுடன், இதனால் தமிழகத்தின் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்றும் கூறியது.

மறுபுறம், பரந்தூர் பகுதி மக்கள் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதை வரவேற்று, மகிழ்ச்சி தெரிவித்தனர். இதனால், பரந்தூரில் தமிழக அரசின் அடுத்தகட்ட நடவடிக்கை என்னவாக இருக்கும் என்பது அனைத்துத் தரப்பினரிடையேயும் எதிர்பார்ப்பாக இருந்தது.

விரிவாக்கம் குறித்து பரிசீலனை

தற்போது பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டுள்ளதால், மீனம்பாக்கம் விமான நிலையத்தை விரிவாக்கம் செய்வது குறித்து தமிழக அரசு பரிசீலித்து வருகிறது. இதற்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்து, விரைவில் டெண்டர் விடப்படும் என தெரிகிறது.

மேலும், பொழிச்சலூர் - தாராப்பாக்கம் இடையே அணுகுசாலை அமைப்பது குறித்தும் தமிழக அரசு பரிசீலித்து வருகிறது.

5-வது முனையம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் 5-வது முனையம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகளையும் தமிழக அரசு ஆய்வு செய்து வருகிறது. இதற்கிடையே, ஓடுபாதை திறன் தொடர்பான பணிகளும் நடைபெற்று வருகின்றன.

இந்த விரிவாக்க நடவடிக்கைகள் மூலம் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பரந்தூர் விமான நிலையத் திட்டத்திற்கு மாற்றாக சென்னை விமான நிலையம் விரிவாக்கம் செய்யப்படுவதால், தொழில் மற்றும் வேலைவாய்ப்புகள் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மீனம்பாக்கத்தில் 5-வது முனையம் அமைப்பது தொடர்பாக ஆலோசனைகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. விமான நிலையம், தாம்பரம், மதுரவாயல் வழியாக புறவழி அணுகுசாலை அமைப்பது தொடர்பான திட்டப்பணிகளும் பரிசீலனையில் உள்ளதாக தெரிகிறது.

அதேநேரத்தில், குடியிருப்பு பகுதிகளுக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாத வகையில் இந்தப் பணிகள் மேற்கொள்ளப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

எழுத்துரு விளம்பரங்கள்