Paristamil Navigation Paristamil advert login

பயங்கரவாத வழக்குகளுக்கு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம்

பயங்கரவாத வழக்குகளுக்கு என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றம்

1 புரட்டாசி 2026 செவ்வாய் 06:47 | பார்வைகள் : 101


பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பான வழக்குகளை விரைந்து விசாரிக்க, பிரத்யேக என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும் என, மத்திய அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோவை உக்கடம் கோட்டை சங்கமேஸ்வரர் கோவில் முன், கடந்த 2022ம் ஆண்டு அக்., 23ல் அதிகாலை கார் குண்டு வெடிப்பு சம்பவம் நடந்தது. இதில், ஜமேஷா முபீன் உயிரிழந்தார். இந்த வழக்கை, தேசிய புலனாய்வு முகமையான என்.ஐ.ஏ., விசாரித்து வருகிறது.

இவ்வழக்கில் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்ட முகம்மது தல்ஹா, வெடிகுண்டு தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்ட மாருதி காரை வாங்கி, ஜமேஷா முபீனிடம் ஒப்படைத்ததாக கூறி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில், பூந்தமல்லி சிறப்பு நீதிமன்றம் ஜாமின் மனுவை நிராகரித்ததை எதிர்த்து, முகம்மது தல்ஹா சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த மனுவை நீதிபதிகள் அனிதா சுமந்த், சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு விசாரித்தது.

நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

முகம்மது தல்ஹா, பழைய கார் வியாபாரி என்ற போர்வையில், முறையான ஆவணப் பதிவுகள் இல்லாமல் காரை வாங்கி, முக்கிய குற்றவாளியிடம் வழங்கியுள்ளார் என்பதற்கும், தாக்குதலுக்கு முன் நடந்த சதி ஆலோசனைக் கூட்டத்தில் அவர் பங்கேற்றதற்கும் ஆதாரங்கள் உள்ளன. மேலும், ஐ.எஸ்., ஆதரவு கருத்துகள் மற்றும் அதற்கான ஆதாரங்கள் அவரது மின்னணு சாதனங்களில் இருப்பதற்கும் முகாந்திரம் உள்ளது. எனவே, அவரது மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் பயங்கரவாத நடவடிக்கைகள் தொடர்பாக நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து விசாரிக்க, பிரத்யேக என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றங்களை உடனடியாக அமைக்க வேண்டும்.

பயங்கரவாத வழக்குகளின் விசாரணையை, குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட ஒரு ஆண்டுக்குள் முடிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. எனவே, மத்திய உள்துறை செயலர் மற்றும் தமிழக உள்துறை கூடுதல் தலைமை செயலர் ஆகியோரை, தாமாக முன்வந்து இந்த வழக்கில் இணைக்கிறோம். இவ்விவகாரம் தொடர்பாக செப்., 24ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.

இவ்வாறு நீதிபதிகள் உத்தரவில் தெரிவித்துள்ளனர்.
 

எழுத்துரு விளம்பரங்கள்