Paristamil Navigation Paristamil advert login

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பு

2 புரட்டாசி 2026 புதன் 05:14 | பார்வைகள் : 138


டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து இன்று வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

13 மாவட்டங்களில் 16 லட்சம் ஏக்கர் பாசனம்

டெல்டா விவசாயிகளின் உயிர் மூச்சாக விளங்கும் மேட்டூர் அணையின் மூலம் சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர், திருச்சி, தஞ்சாவூர், திருவாரூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர் ஆகிய 13 மாவட்டங்களில் சுமார் 16 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகின்றன.

இதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 12-ந்தேதி பாசனத்திற்காக மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறப்பது வழக்கம்.

நீர்வரத்து அதிகரிப்பு

ஆனால், இந்த ஆண்டு காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் போதிய மழை பெய்யாததால், வழக்கமான ஜூன் 12-ந்தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.

இதற்கிடையே, கடந்த 2 வாரங்களாக கர்நாடகாவில் பெய்து வரும் மழையால் அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் (கே.ஆர்.எஸ்.) அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தது. இதனால் அந்த அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது.

இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் படிப்படியாக அதிகரித்தது. அணையின் நீர்மட்டம் 90 அடியை தாண்டியதை தொடர்ந்து, விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று செப்டம்பர் 1-ந்தேதி முதல் டெல்டா பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்படும் என்றும், தொடர்ந்து 45 நாட்களுக்கு தண்ணீர் திறக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்தது.

மேட்டூர் வந்த முதல்-அமைச்சர் விஜய்

அதன்படி, இன்று காலை மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்கு தண்ணீர் திறந்து விடப்பட்டது.

இதற்காக முதல்-அமைச்சர் விஜய் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை சேலம் வந்தடைந்தார். அங்கிருந்து வேனில் சாலை மார்க்கமாக பூசாரிப்பட்டி பிரிவு, வள்ளையூர்கோட்டை, ஜோடுகுளி, தீவட்டிப்பட்டி, மேச்சேரி வழியாக மேட்டூருக்கு சென்றார்.

திறந்த வேனில் ரோடு ஷோ

முதல்-அமைச்சர் விஜய்யின் சேலம் வருகையையொட்டி மாவட்டம் முழுவதும் போலீஸ் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

அவரை வரவேற்கும் வகையில், சேலம் விமான நிலையத்தில் இருந்து மேட்டூர் வரையிலான சாலையின் இருபுறங்களிலும் கட்சி கொடிகள் கட்டப்பட்டிருந்தன.

திறந்த வேனில் சென்ற முதல்-அமைச்சர் விஜய், சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் தொண்டர்களை நோக்கி கையசைத்தவாறு ரோடு ஷோ நடத்தினார். அவருக்கு ஏராளமான பொதுமக்களும், தவெக தொண்டர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறப்பு

மேட்டூர் அணைக்கு வந்த முதல்-அமைச்சர் விஜய்க்கு அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மேட்டூர் அணையின் வலது கரையில் இருந்து டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீரை முதல்-அமைச்சர் விஜய் திறந்து வைத்தார்.

அணை திறக்கப்பட்டதும் வெளியேறிய காவிரி நீரில் மலர்கள் மற்றும் நெல்லை தூவி முதல்-அமைச்சர் விஜய் வரவேற்றார்.

எழுத்துரு விளம்பரங்கள்