தவெகவுக்கு போன அதிமுகவினரின் எண்ணம் ஈடேறவில்லை: இபிஎஸ்
2 புரட்டாசி 2026 புதன் 10:43 | பார்வைகள் : 225
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு தவெகவுக்கு சென்ற அதிமுகவினரின் எண்ணம் ஈடேறவில்லை என்றும், அங்கு சென்றவர்கள் மீண்டும் எம்எல்ஏவாக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளதாகவும் அதிமுக பொதுச்செயலாளர் இபிஎஸ் தெரிவித்துள்ளார்.
சட்டசபை நேரடி ஒளிபரப்பு
கோவையில் செய்தியாளர்களிடம் இபிஎஸ் கூறியதாவது:
சட்டசபை நிகழ்வுகளை நேரடியாக ஒளிபரப்பு செய்தால்தான், அங்கு நடைபெறும் விவாதங்கள் குறித்த தகவல்கள் மக்களிடம் சென்றடையும். ஒவ்வொரு எம்எல்ஏவும் தங்களது தொகுதி தொடர்பான பிரச்சினைகளை சட்டசபையில் கொண்டு வருவது மக்களுக்கு தெரியவரும்.
சட்டசபையை சபாநாயகர் 10 மணி நேரம் நடத்துகிறார். இன்னும் சில நாட்களில் 24 மணி நேரம் நடத்தினாலும் நடத்துவார். ஆனால், அனைவருக்கும் வாய்ப்பு வழங்குகிறார். 10 மணி நேரம் சட்டசபையை நடத்துவது சரியானது அல்ல. குறிப்பிட்ட நேரத்தில் கூட்டத்தை முடித்துக்கொள்ள வேண்டும்.
அலுவல் ஆய்வுக்குழுவைக் கூட்டி முடிவெடுக்கின்றனர். ஆனால், அந்த முடிவின்படி செயல்படுவதில்லை.
சட்டம்-ஒழுங்கு சீர்கேடு
நாளை மறுநாள் காவல்துறை மானியக் கோரிக்கையின் மீது சட்டம்-ஒழுங்கு குறித்து பேசுவோம். இதுதொடர்பான பிரச்சினைகளை அரசின் கவனத்துக்கு கொண்டு வருவோம்.
ஆட்சி பொறுப்பேற்று 110 நாட்கள் ஆன நிலையில், தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு முழுமையாக சீர்கெட்டுள்ளது. கொலை, கொள்ளை, பாலியல் சீண்டல் உள்ளிட்ட சம்பவங்கள் அதிகரித்துள்ளன. ஆட்சியின் நிர்வாக சீர்கேடு காரணமாகவே இவை அதிகரித்துள்ளதாக இபிஎஸ் தெரிவித்தார்.
கடன் குறித்து விமர்சனம்
தமிழக அரசுக்கு அதிகமான கடன் இருப்பது அனைவருக்கும் தெரியும். அதிகமான அறிவிப்புகளை அரசு வெளியிட்டு வருகிறது. அதிகமாக அறிவிப்புகளை வெளியிட்டால், அதிகமாக கடன் வாங்குவார்கள் என்று அர்த்தம்.
கடந்த காலத்தில் ரூ.5 லட்சம் கோடி கடன் வாங்கினர். இந்த அரசு ஐந்து ஆண்டுகள் நீடிக்காது. ஒருவேளை நீடித்தால் ரூ.10 லட்சம் கோடி கடன் வாங்குவார்கள்.
மின்சார வாரியத்தில் வெள்ளை அறிக்கை வெளியிட்டனர். அதில் ரூ.2.47 லட்சம் கோடி கடன் வாங்கியதாக கூறினர். மின்சாரம் தொடர்பாக ரூ.85 ஆயிரம் கோடி மதிப்பிலான திட்டங்களை அறிவித்துள்ளனர்.
அறிவிப்பது மட்டும் தானே. திட்டங்கள் உண்மையிலேயே செயல்படுத்தப்பட்டனவா அல்லது இல்லையா என்பதை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும்.
தமிழகத்தில் ஊழல் அதிகரிப்பு
தமிழகத்தில் ஊழல் அதிகரித்துள்ளது. லஞ்ச ஒழிப்புத்துறை நடத்தும் சோதனைகளே இதற்கு சாட்சி.
விஜய் இந்தியாவின் பிரதமராகலாம், ஜனாதிபதியாகலாம். அமெரிக்க அதிபராகவும் ஆகலாம். நாங்கள் தே.ஜ. கூட்டணியில் தொடர்ந்து நீடிக்கிறோம்.
மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் தொகுதி மறுவரையறை முடிந்த பிறகுதான் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.
விஜய் காஸ்ட்லி முதல்வராக உள்ளார்.
தவெகவுக்கு சென்றவர்களின் எண்ணம் ஈடேறவில்லை
தவெகவுக்கு சென்ற அதிமுகவினரின் எண்ணம் ஈடேறவில்லை. அங்கு சென்றவர்கள் எம்எல்ஏவாக செயல்பட அனுமதிக்க வேண்டும் எனக்கோரி நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.
இவ்வாறு இபிஎஸ் கூறினார்.



