கிறிஸ்துவத்திற்கு மாறியவர் வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்த முடியாது!

கிறிஸ்துவத்திற்கு மாறியவர் வன்கொடுமை சட்டத்தை பயன்படுத்த முடியாது!

2 புரட்டாசி 2026 புதன் 15:11 | பார்வைகள் : 261


கிறிஸ்தவ மதத்திற்கு மாறிய ஒருவர், பட்டியலினத்தவர் என்ற அடிப்படையில் வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் பாதுகாப்பு கோர முடியாது என சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை தீர்ப்பளித்துள்ளது.

பள்ளியில் ஜாதி பாகுபாடு என புகார்

தேனி மாவட்டம், தென்கரை பகுதியைச் சேர்ந்த ரவிக்குமார் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:

“நான் இந்து ஆதிதிராவிடர் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர். ஒரு பள்ளியில் உடற்கல்வி ஆசிரியராக பணியாற்றி வருகிறேன். பள்ளியில் ஜாதி பாகுபாடு காரணமாக, பள்ளி முதல்வர் என்னை தரக்குறைவாக பேசியுள்ளார்.

பழிவாங்கும் நோக்கில் நிர்வாகம் என்னை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்துள்ளது. பள்ளித் தலைவர், முதல்வர் மற்றும் பொருளாளர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி போலீசில் புகார் அளித்துள்ளேன். அந்தப் புகார் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்” எனக் குறிப்பிட்டிருந்தார்.

பள்ளி நிர்வாகம் எதிர்ப்பு

இந்த வழக்கை நீதிபதி எல். விக்டோரியா கவுரி விசாரித்தார்.

பள்ளி நிர்வாகம் தரப்பில், “மனுதாரர் கடந்த 2015-ம் ஆண்டு உசிலம்பட்டியில் உள்ள ஒரு சர்ச்சில் ஞானஸ்நானம் பெற்றார். அதன்பின்னர் கிறிஸ்தவ மதத்தைப் பின்பற்றி வருகிறார். இதனை அவர் மறைத்துள்ளார். அவர் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் உண்மைக்கு புறம்பானவை” எனத் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி உத்தரவு

இந்த வழக்கில் நீதிபதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

ஒருவர் வேறொரு மதத்தைப் பின்பற்றி, அதன்படி வாழ்ந்து கொண்டே, சட்டரீதியான சலுகைகளைப் பெறுவதற்காக பட்டியல் ஜாதி அந்தஸ்தை கோர முடியாது.

கடந்த 1950-ம் ஆண்டு அரசியலமைப்புச் சட்ட திருத்தத்தின்படி, பட்டியல் ஜாதியினர் இந்து, சீக்கியம் அல்லது பவுத்தம் ஆகிய மதங்களைத் தவிர வேறு மதத்தைப் பின்பற்றும் எந்தவொரு நபரும் பட்டியல் ஜாதியைச் சேர்ந்தவராக கருதப்படமாட்டார்.

எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது.

இவ்வாறு நீதிபதி உத்தரவிட்டார்.

தொடர்ந்து படிக்க