நீரை சரியான முறையில் பயன்படுத்துவோம் : முதல்வர் விஜய்

நீரை சரியான முறையில் பயன்படுத்துவோம் : முதல்வர் விஜய்

3 புரட்டாசி 2026 வியாழன் 05:14 | பார்வைகள் : 183


மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு முதல்வர் விஜய் நேற்று தண்ணீர் திறந்து வைத்தார். இதையடுத்து, 'நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம்' என முதல்வர் விஜய் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சேலம் மாவட்டத்தில் உள்ள மேட்டூர் அணையின் முழு நீர்மட்டம் 120 அடி. வழக்கமாக, அணையின் நீர்மட்டம் 90 அடிக்கு மேல் இருக்கும் நிலையில், பாசனத்துக்காக தண்ணீர் திறக்கப்படும். இதன் மூலம் காவிரி டெல்டாவின் 13 மாவட்டங்களில் 17.10 லட்சம் ஏக்கர் பரப்பளவில் குறுவை, சம்பா, தாளடி நெற்பயிர்கள் சாகுபடி செய்யப்படுகின்றன.

அணை கட்டப்பட்டு 93 ஆண்டுகள் நிறைவடைய உள்ள நிலையில், இதுவரை ஜூன் 12-ம் தேதி 20 முறையும், அதற்கு முன்னதாக 11 முறையும், தாமதமாக 61 முறையும் என மொத்தம் 92 ஆண்டுகள் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

நடப்பாண்டு ஜூன் 12-ம் தேதி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 79.56 அடியாக மட்டுமே இருந்ததால், டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படவில்லை. இதனிடையே, கடந்த ஆகஸ்ட் 1-ம் தேதி கர்நாடகாவின் கபினி அணையில் இருந்து திறக்கப்பட்ட உபரி நீர் தொடர்ந்து மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருந்தது.

இதையடுத்து, மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான தண்ணீரை முதல்வர் விஜய் நேற்று காலை 11:40 மணிக்கு திறந்து வைத்தார். முதற்கட்டமாக வினாடிக்கு 3,000 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டது. பின்னர் நீர் திறப்பு வினாடிக்கு 7,000 கனஅடியாக அதிகரிக்கப்பட்டது.

நீரை சிக்கனமாக பயன்படுத்த அறிவுறுத்தல்

இதுதொடர்பாக தமிழக அரசு சார்பில் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர்வரத்து உள்ளிட்ட நிலவரங்கள் தொடர்ந்து கண்காணிக்கப்படும். பாசனத் தேவைக்கு ஏற்ப, தண்ணீர் திறப்பு படிப்படியாக முறைப்படுத்தப்படும்.

வேளாண்மை, நீர்வளம், வருவாய் துறைகள் மற்றும் மாவட்ட நிர்வாகங்களுடன் ஒருங்கிணைந்து செயல்பட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேட்டூர் அணையில் இருந்து திறக்கப்படும் ஒவ்வொரு கனஅடி தண்ணீரும் விவசாயிகளின் நலனுக்காக முறையாக பயன்படுத்தப்படுவது உறுதி செய்யப்படும்.

காவிரி ஆறு மற்றும் கால்வாய்களின் வழித்தடங்களில் சட்டவிரோதமாக மின் மோட்டார்கள் மூலம் தண்ணீர் உறிஞ்சுவது, அனுமதியின்றி தண்ணீர் எடுப்பது, அனுமதிக்கப்பட்ட நீரேற்று திட்டங்களில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிகமாக தண்ணீர் எடுப்பது ஆகியவை கண்டிப்பாக தடுக்கப்படும்.

இதற்காக நீர்வளம், வருவாய், காவல் மற்றும் மின்சாரத் துறை அலுவலர்களை கொண்ட கூட்டு கண்காணிப்புக் குழுக்கள் அமைக்கப்பட்டு, இரவு பகலாக ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும்.

தென்மேற்கு பருவமழை பற்றாக்குறை மற்றும் தீவிர எல் நினோ தாக்கத்தை கருத்தில் கொண்டு, தற்போது தண்ணீர் திறப்பது என்பது வரையறுக்கப்பட்ட நீரை சிக்கனமாகவும், திறம்படவும் நிர்வகித்து சம்பா சாகுபடியை பாதுகாப்பதற்கான திட்டமிட்ட நடவடிக்கையாகும்.

எனவே, விவசாயிகள் குறைந்த நீர் தேவையுள்ள மத்திய கால நெல் ரகங்களையும், நேரடி நெல் விதைப்பு உள்ளிட்ட நீர் சிக்கன சாகுபடி முறைகளையும் பின்பற்ற வேண்டும்.

'நீரை சிக்கனமாக பயன்படுத்துவோம்; கடைமடை வரை பகிர்ந்தளிப்போம். சம்பா சாகுபடியை வெற்றி பெறச் செய்வோம்' என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரை கொஞ்சிய மூதாட்டி

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்த பின்னர், முதல்வர் விஜய் சேலம் விமான நிலையத்துக்கு புறப்பட்டார்.

மதியம் 2 மணியளவில் மேட்டூர் அனல் மின் நிலையம் சின்னகாவூர் அருகே விஜய் சென்றபோது, சாலையோரத்தில் விவசாயி ராமசாமி, 60, அவரது மனைவி பழனியம்மாள், 52, மற்றும் ராமசாமியின் சகோதரி செல்லம், 73, ஆகியோர் விவசாயப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

அப்போது தனது வாகனத்தை நிறுத்தி இறங்கிய முதல்வர் விஜய், ராமசாமியின் வீட்டுக்குச் சென்றார். அவரை ராமசாமி குடும்பத்தினர் ஆர்வத்துடன் வரவேற்று வீட்டுக்குள் அழைத்துச் சென்றனர்.

அங்கு விவசாயப் பணிகள் குறித்து செல்லத்திடம் விஜய் கேட்டறிந்தார். அப்போது செல்லம், விஜயின் கன்னத்தில் இரு கைகளையும் வைத்து கொஞ்சினார். தொடர்ந்து மூதாட்டிக்கு விஜய் கண்ணாடி வழங்கினார்.

மேலும், ராமசாமியின் குடும்ப உறுப்பினர்களுக்கு வேட்டி, பட்டு சேலைகளை வழங்கி வாழ்த்து தெரிவித்துவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். இதேபோல், மேச்சேரி திமிரிக்கோட்டையில் சாலையோரம் நின்றிருந்த மூன்று மூதாட்டிகளிடமும் விஜய் நலம் விசாரித்தார்.

த.வெ.க. ஆட்சியில் முதல் முறை

மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான தண்ணீரை 2018 ஜூலை 19, 2019 ஆகஸ்ட் 13, 2020 ஜூன் 12 ஆகிய தேதிகளில் அப்போதைய முதல்வர் பழனிசாமி மூன்று முறை திறந்து வைத்தார்.

அதன்பின் 2021 ஜூன் 12, 2022 மே 24, 2023 ஜூன் 12, 2025 ஜூன் 12 ஆகிய தேதிகளில் நான்கு முறை அப்போதைய முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்தார்.

இந்த நிலையில், த.வெ.க. ஆட்சியில் முதல்வர் விஜய் முதல் முறையாக மேட்டூர் அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கான தண்ணீரை நேற்று திறந்து வைத்துள்ளார்.

தொடர்ந்து, மேட்டூர் அணையின் கசிவுநீர் சுரங்கம், அணை அடிவாரத்தில் உள்ள 50 மெகாவாட் நீர்மின் உற்பத்தி நிலையம் மற்றும் 200 மெகாவாட் சுரங்க மின் உற்பத்தி நிலையம் ஆகியவற்றையும் முதல்வர் விஜய் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், விஜய் தமிழன் பார்த்திபன், நீர்வளத்துறை செயலர் பிரசாந்த் மு.வடநேரே, முதன்மை பொறியாளர் கோபாலகிருஷ்ணன், சேலம் கலெக்டர் இளம் பகவத், திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஜெயகுமாரி மற்றும் எம்.எல்.ஏ.க்கள் லட்சுமணன், சிவகுமார், பழனிவேல் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தொடர்ந்து படிக்க