டிஜிட்டல் லைசென்ஸ், வழக்குகள் ரத்து: முதல்வர் விஜய் அறிவிப்பு
3 புரட்டாசி 2026 வியாழன் 06:54 | பார்வைகள் : 256
ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார். மேலும், தி.மு.க. ஆட்சிக் காலத்தில் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் அனைத்தும் திரும்பப் பெறப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் தொடர்பாக சட்டசபையில் விதி 110-ன் கீழ் முதல்வர் விஜய் வெளியிட்ட அறிவிப்புகள்:
- திருநெல்வேலி மாநகராட்சியில் ரூ.256 கோடி மதிப்பீட்டில் 9 மெகாவாட் திறன் கொண்டும், சேலம் மாநகராட்சியில் ரூ.291 கோடி மதிப்பீட்டில் 10 மெகாவாட் திறன் கொண்டும் திடக்கழிவில் இருந்து எரிசக்தி உற்பத்தி செய்யும் திட்டங்கள் செயல்படுத்தப்படும். இத்திட்டங்கள் மொத்தம் ரூ.547 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
- சென்னை உட்பட அனைத்து நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளிலும் சாலைகளை சீரமைத்தல் மற்றும் புதிய சாலைகள் அமைத்தல் உள்ளிட்ட பணிகள் ரூ.1,850 கோடி மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும்.
- பள்ளிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் சாலை வசதிகள் மேம்படுத்தப்படும். மேலும், 105 சாலை சந்திப்புகள் ரூ.110 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
- பிற மாநகராட்சிகளிலும் இதேபோன்ற மேம்பாட்டுப் பணிகள் ரூ.165 கோடி செலவில் மேற்கொள்ளப்படும். இப்பணிகள் அனைத்தும் சேர்த்து ரூ.275 கோடி மதிப்பீட்டில் ஒருங்கிணைந்த நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டமாக செயல்படுத்தப்படும்.
- மதுரை மாநகராட்சியில் 40 ஆண்டுகள் பழமையான பாதாள சாக்கடை அமைப்பை சீரமைக்க, முதற்கட்டமாக நடப்பாண்டில் ரூ.2,400 கோடி செலவில் பணிகள் மேற்கொள்ளப்படும்.
- நாகர்கோவில் மாநகராட்சியில் விடுபட்ட மற்றும் புதிதாக இணைக்கப்பட்ட பகுதிகளிலும், குன்றத்தூர் மற்றும் நந்திவரம்-கூடுவாஞ்சேரி நகராட்சிகளிலும் ரூ.960 கோடி செலவில் புதிய பாதாள சாக்கடைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும்.
- சென்னை பெரம்பூர், கொளத்தூர், வில்லிவாக்கம், எழும்பூர் உள்ளிட்ட பகுதிகளில் குடிநீர் மற்றும் கழிவுநீர் கட்டமைப்புகளை மேம்படுத்த ரூ.236 கோடி செலவிடப்படும்.
- வடசென்னை, ஆவடி, பொன்னேரி மற்றும் மீஞ்சூர் பகுதிகளின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், மீஞ்சூரில் நாளொன்றுக்கு 400 மில்லியன் லிட்டர் கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் ரூ.4,800 கோடி செலவில் அமைக்கப்படும்.
- ஆவடி மாநகராட்சியில் அனைத்து வீடுகளுக்கும் 24 மணி நேரமும் குடிநீர் வழங்கும் வகையில் ரூ.500 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டம் செயல்படுத்தப்படும்.
- மதுரை, கடலூர் மாநகராட்சிகள், 9 நகராட்சிகள் மற்றும் 20 பேரூராட்சிகளில் குடிநீர் வசதிகளை மேம்படுத்த ரூ.1,000 கோடி ஒதுக்கப்படும். மேலும், பழமையான 33 கூட்டுக்குடிநீர் திட்டங்களை சீரமைக்க முதற்கட்டமாக ரூ.300 கோடி ஒதுக்கப்படும்.
- சென்னை கீழ்ப்பாக்கம் குடிநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் திறனை அதிகரிக்க ரூ.410 கோடி செலவில் திட்டம் செயல்படுத்தப்படும்.
- பொதுமக்களுக்கான பொழுதுபோக்கு வசதிகளை மேம்படுத்துவதுடன், பல்வேறு பசுமைத் திட்டங்கள் செயல்படுத்தப்படும். மக்கள் இயக்கமாக ஒரு கோடி மரக்கன்றுகள் நடப்பட்டு பராமரிக்கப்படும்.
- திருச்சி, திருப்பூர் மற்றும் புதுக்கோட்டை மாவட்டங்களில் பெரிய பூங்காக்கள் ரூ.130 கோடி செலவிலும், மாநிலம் முழுவதும் 250 புதிய பூங்காக்கள் ரூ.175 கோடி செலவிலும் அமைக்கப்படும். மொத்தம் ரூ.305 கோடி செலவில் இப்பணிகள் மேற்கொள்ளப்படும்.
- புதிய வகுப்பறைகள் கட்டுதல், நவீன வசதிகளை ஏற்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு உள்கட்டமைப்புப் பணிகள் மொத்தம் ரூ.335 கோடி செலவில் மேற்கொள்ளப்படும்.
- சிதம்பரம் நகராட்சியில் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற தில்லை நடராஜர் திருத்தேர் விழாவை சிறப்பாக நடத்தும் வகையில், கோயிலைச் சுற்றியுள்ள நான்கு ரத வீதிகளில் குடிநீர், பாதாள சாக்கடை, மின்சாரம் மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகளை தரைக்கு அடியில் கொண்டு செல்லும் பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும், ரத வீதிகள் நவீன முறையில் சீரமைக்கப்படும். இதற்காக ரூ.36 கோடி ஒதுக்கப்படும்.
- கடலூரில் புனித டேவிட் கோட்டை முதல் வெள்ளி கடற்கரை வரை ரூ.8 கோடி மதிப்பீட்டில் பாரம்பரிய நடைபாதை அமைக்கப்படும்.
- கன்னியாகுமரி கடற்கரைப் பகுதியை அழகுபடுத்துவதுடன், சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்த ரூ.50 கோடி செலவிடப்படும்.
- சென்னை மாநகராட்சியின் உட்கட்டமைப்பு வசதி குறைவாக உள்ள பகுதிகளில் சாலைகள், மழைநீர் வடிகால்கள், தெருவிளக்குகள், நடைபாதைகள், திடக்கழிவு மேலாண்மை வசதிகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் சமுதாய நலக்கூடங்கள் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் ரூ.100 கோடி செலவில் மேம்படுத்தப்படும்.
அன்றே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம்
- ஓட்டுநர் தேர்வில் தேர்ச்சி பெறும் விண்ணப்பதாரர்களுக்கு அன்றைய தினமே டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் வழங்கப்படும். மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் இந்த வசதி ஏற்படுத்தப்படும்.
- போக்குவரத்து தொடர்பான அனைத்து அலுவலக சேவைகளுக்கும் எந்த இடத்திலும் பதிவு, லைசென்ஸ் என்ற முறையில் வசதிகள் ஏற்படுத்தப்படும்.
- புதிய வாகனம் வாங்குவோர் Digital RC-யை இணையம் வழியாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாநிலம் முழுவதும் வரும் செப்டம்பர் 15-ம் தேதி முதல் இந்த வசதி வழங்கப்படும்.
விவசாயிகள், ஆசிரியர்கள் மீதான வழக்குகள் வாபஸ்
- கடந்த 2021-ம் ஆண்டு மே முதல் 2026-ம் ஆண்டு ஏப்ரல் வரை தங்களது வாழ்வாதாரம், உரிமைகள் மற்றும் நியாயமான கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட அனைத்து வழக்குகளும் திரும்பப் பெறப்படும்.
- ஜனநாயக உரிமைகளை மதிக்கும் தங்களது அரசு, கடந்த ஆட்சியாளர்களால் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியபோது பதிவு செய்யப்பட்ட வழக்குகளை மனிதநேய மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் திரும்பப் பெற முடிவு செய்துள்ளது.
- விவசாயிகள் மற்றும் ஆசிரியர்களுக்கும், அவர்களது நியாயமான கோரிக்கைகளுக்கும் இந்த அரசு உறுதுணையாக இருக்கும்.
சிப்காட், பரந்தூர் போராட்ட வழக்குகளும் வாபஸ்
- திருவண்ணாமலை மாவட்டம் சிப்காட் தொழிற்பேட்டை எதிர்ப்புப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டதுடன், சில விவசாயிகள் மீது குண்டர் தடுப்புச் சட்டமும் போடப்பட்டது.
- பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்கும் திட்டத்துக்கு எதிராக விவசாயிகள் தொடர் போராட்டங்களில் ஈடுபட்டனர். விவசாய நிலங்கள், நீர்நிலைகள் மற்றும் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்பதால் விமான நிலையத் திட்டத்தை கைவிட வேண்டும் என அவர்கள் போராடினர். இந்தப் போராட்டங்களில் ஈடுபட்ட விவசாயிகள் மீதும் முந்தைய அரசால் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளன.
- மனிதநேய மற்றும் ஜனநாயகக் கொள்கைகளின் அடிப்படையில் அனைத்து வழக்குகளையும் திரும்பப் பெற அரசு முடிவு செய்துள்ளது. இந்த நடவடிக்கை ஜனநாயக உரிமைகளை மேலும் வலுப்படுத்துவதுடன், சாமானிய மக்களுக்கும் அரசுக்கும் இடையிலான நம்பிக்கையை உறுதிப்படுத்தும்.
இவ்வாறு முதல்வர் விஜய் தெரிவித்தார்.



