2029-ல் பிரதமர் வேட்பாளர் விஜய்தான்: தவெக எம்.எல்.ஏ. கனிமொழி
3 புரட்டாசி 2026 வியாழன் 07:55 | பார்வைகள் : 245
வரும் 2029-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் தலைவர் முதல்வர் விஜய்தான்’ என தவெக எம்.எல்.ஏ. கனிமொழி தெரிவித்துள்ளார்.
அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது:
2029-ம் ஆண்டு பிரதமர் வேட்பாளர் தலைவர் முதல்வர் விஜய்தான். கடந்த 2, 3 நாட்களாக இந்த விவகாரம் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. 2025-ம் ஆண்டிலும் இதுபோன்ற ஒரு நிகழ்வு நடைபெற்றது. அப்போது இதுபோன்றுதான் என்னிடம் கேள்விகள் கேட்கப்பட்டன. 2026-ம் ஆண்டு என்ன நடந்தது என்பதை இந்த நாடே பார்த்திருக்கும்.
2029-ம் ஆண்டில் முக்கியமான விஷயம் என்னவென்றால், பிரதமர் யார் என்பதை முடிவு செய்வது டெல்லியில் இருந்து கிடையாது. அது தமிழகத்தில் இருந்துதான் முடிவு செய்யப்பட்டு வரப்போகிறது. 2029-ம் ஆண்டு இந்திய அரசியலில் மிகப்பெரிய மாற்றம் ஏற்படும்.
காங்கிரஸ் கூட்டணியில் இருக்கிறதா, வெளியே செல்கிறதா என்பதை 2026-ம் ஆண்டில் நீங்கள் பார்ப்பீர்கள். விஜயை முதல்வர் இருக்கையில் அமர வைத்தது ராகுல்தான்.
காங்கிரஸ் தலைவர் ராகுல்தான் விஜயின் கையைப் பிடித்து அழைத்துச் சென்று நாற்காலியில் அமர வைப்பார். 2025-ம் ஆண்டு கணித்தது 2026-ல் நடந்திருக்கிறது. அதேபோல் 2029-ல் இது ஆணித்தரமாக நடக்கும். கண்டிப்பாக நடக்கும்.
இவ்வாறு தவெக எம்.எல்.ஏ. கனிமொழி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் - தவெக இடையே மீண்டும் வார்த்தைப் போர்?
ராகுலை பிரதமர் வேட்பாளராக ஏற்கவில்லை என்றால் பதவி விலகுவோம் என காங்கிரஸ் அமைச்சர் ராஜேஷ் குமார் சில நாட்களுக்கு முன்பு தெரிவித்திருந்தார். அவரது கருத்து சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மாநில காங்கிரஸ் தலைவர் மாணிக்கம் தாகூர், முதல்வர் விஜயை சந்தித்து சமாதானம் செய்திருந்தார்.
இந்த நிலையில், தவெக எம்.எல்.ஏ. கனிமொழி தற்போது இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். இதனால் வரும் நாட்களில் தவெகவினருக்கும், காங்கிரஸ் கட்சியினருக்கும் இடையே மீண்டும் வார்த்தைப் போர் வெடிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.



