சிக்கிமில் 40 பனிப்பாறை ஏரிகள் அபாயம்: எச்சரிக்கை
3 புரட்டாசி 2026 வியாழன் 08:59 | பார்வைகள் : 236
சிக்கிம் மாநிலத்தில் பனிப்பாறை ஏரிகளால் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் இருப்பதாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
நேபாளத்தில் ஏற்பட்ட பெருவெள்ளத்தின் பாதிப்புகளில் இருந்து அந்நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில், உயிரிழப்பு எண்ணிக்கை 1,100-ஐ கடந்துள்ளது. இதையடுத்து, மீட்புப் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
நேபாளத்தில் ஏற்பட்ட இயற்கைப் பேரழிவை தொடர்ந்து, இந்தியாவின் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் முக்கிய எச்சரிக்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி, சிக்கிம் மாநிலத்தில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகள் அபாயகரமான நிலையில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
7 ஏரிகள் மிக அதிக அபாயம்
இதுதொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளதாவது:
சிக்கிமில் அடையாளம் காணப்பட்டுள்ள 40-க்கும் மேற்பட்ட பனிப்பாறை ஏரிகளில் 7 ஏரிகள் மிக அதிக பாதிப்பை ஏற்படுத்தக்கூடியவை என வகைப்படுத்தப்பட்டுள்ளன.
மேலும், 16 ஏரிகளில் பெரும்பாலானவை 17,000 அடி உயரத்தில் அமைந்துள்ளன. இவை விரிவான அறிவியல் மதிப்பீட்டின் அடிப்படையில் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.
ஏரிகளின் ஆழம், நீளம், நீரின் அளவு, பனிப்பாறைகளின் தன்மை மற்றும் நிலச்சரிவுகளால் ஏற்படக்கூடிய அபாயங்கள் உள்ளிட்டவை குறித்து மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
இவ்வாறு தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் தெரிவித்துள்ளது.
ஏரிகளின் நீர்மட்டத்தை குறைக்க நடவடிக்கை
தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் எச்சரிக்கையை தொடர்ந்து, அபாயத்தை குறைக்கும் நடவடிக்கையாக பனிப்பாறை ஏரிகளின் நீர்மட்டத்தை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, ஷாகோசூ ஏரியின் நீர்மட்டத்தை 40 மீட்டர் வரை குறைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. ஒருவேளை பனிப்பாறை உடைப்பு ஏற்பட்டால், அதன் மூலம் கீழ்நோக்கி வரும் நீரின் அளவை இந்த நடவடிக்கையால் குறைக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.



