உணவில் கவனம் தேவை: துக்காராம் முண்டே
3 புரட்டாசி 2026 வியாழன் 09:03 | பார்வைகள் : 211
நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்’ என மஹாராஷ்டிரா மாநில உணவு பாதுகாப்புத்துறை ஆணையர் துக்காராம் முண்டே தெரிவித்துள்ளார்.
முன்னுரிமை
மும்பையில் நடைபெற்ற மாநாடு ஒன்றில் அவர் பேசியதாவது:
பொதுமக்கள் தங்களது உடை மற்றும் தோற்றத்திற்கு அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர். ஆனால், அதே முக்கியத்துவத்தை உணவுக்கு அளிப்பதில்லை. நாம் எந்த வகையான புரோட்டீன், கார்போஹைட்ரேட்டுகளை எடுத்துக் கொள்கிறோம் என்பது நமக்குத் தெரியுமா? நாம் சாப்பிடுவது உண்மையில் நமது உடலுக்கும், மனதுக்கும் தேவையானதா என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
உணவு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது தனது முன்னுரிமைகளில் ஒன்றாக உள்ளது.
குறிப்பிட்ட உணவு அல்லது பானம் பிரபலமானது, பிராண்ட் பெயர் கொண்டது அல்லது விளம்பரம் செய்யப்படுகிறது என்பதற்காக மட்டும் அதை உட்கொள்ளக் கூடாது. அது நமக்கு உண்மையில் தேவையானதா என்பதை மக்கள் தங்களுக்குத் தாங்களே கேட்டுக்கொள்ள வேண்டும்.
குறிப்பிட்ட இடத்தில் மற்றவர்கள் சாப்பிடுகின்றனர் என்பதற்காக அங்கேயே சாப்பிடுவது அல்லது அங்கீகரிக்கப்பட்ட பிராண்ட் என்பதற்காக ஏதாவது பொருளை வாங்குவது என மற்றவர்கள் செய்வதையே மக்களும் பின்பற்றுகின்றனர்.
உணவில் கவனம்
நீங்கள் என்ன சாப்பிடுகிறீர்கள், எப்படி சாப்பிடுகிறீர்கள், எவ்வளவு சாப்பிடுகிறீர்கள், எப்போது சாப்பிடுகிறீர்கள் என்பதையே பொறுத்து ஒரு மனிதர் உருவாகிறார். தோற்றத்தில் மட்டும் கவனம் செலுத்துவதைவிட இந்த காரணிகள் மிகவும் முக்கியமானவை.
ஒருவரின் தோற்றமும் அவர் உட்கொள்ளும் உணவுகளால் பாதிக்கப்படுகிறது. சரியான அளவு புரோட்டீன் மற்றும் கலோரிகள் அடங்கிய சரிவிகிதமான உணவை உட்கொள்வது முக்கியம். வறுத்த உணவுகள், அதிக கொழுப்பு, சர்க்கரை மற்றும் சோடியம் நிறைந்த உணவுகளை தவிர்க்க வேண்டும்.
உயிர் வாழ்வதற்கு உணவு போன்ற அடிப்படைத் தேவைக்கு மக்கள் ஏன் போதுமான கவனம் செலுத்துவதில்லை என்ற கேள்வியும் எழுகிறது.
தங்கள் முகம் மற்றும் உடல் குறித்து அதிக அக்கறை கொண்டவர்கள், அவை தாங்கள் உட்கொள்ளும் உணவுகளாலேயே பாதிக்கப்படுகின்றன என்பதை புரிந்து கொள்ள வேண்டும். உணவை தேர்வு செய்வதில் மக்கள் மிகவும் விவேகமாகவும், விழிப்புடனும், உணர்வுடனும் இருக்க வேண்டும். நாம் என்ன சாப்பிடுகிறோம் என்பதை துல்லியமாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
பாரபட்சம் இல்லை
சிறிய உணவகங்கள் முதல் ஐந்து நட்சத்திர நிறுவனங்கள் வரை மேற்கொள்ளப்படும் ஆய்வுகள் அனைத்தும் ஒரே மாதிரியாகத்தான் இருக்கும். அனைத்து நிறுவனங்களுக்கும் வழக்கமான செயல்பாட்டு நடைமுறைகள் மற்றும் விதிமுறைகள் ஒரே மாதிரியாக உள்ளன.
தெருவோர உணவகங்கள், ஐந்து நட்சத்திர நிறுவனங்கள் என உணவு பாதுகாப்புத்துறை பாரபட்சம் பார்ப்பதில்லை. வட பாவ் கடைகளுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். மும்பையில் உள்ள சில முக்கிய கிளப்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அமைவிடம் அல்லது நிறுவனத்தின் நற்பெயரை வைத்து எந்த முடிவும் எடுக்கப்படாது. அந்த நிறுவனம் விதிமுறைகளுக்கு இணங்குகிறதா என்பதே ஒரே அளவுகோல்.
உணவு பாதுகாப்பில் சமரசம் இல்லை
சஸ்பெண்ட் செய்யப்பட்ட கிளப் ஒன்றில் நானும் ஒரு உறுப்பினராக இருந்தேன். இருப்பினும், ஒரு நிறுவனத்தில் செல்வாக்கு மிக்கவர்கள் இருப்பதோ முக்கியமானது அல்ல. அங்கு பரிமாறப்படும் உணவு தேவையான தரத்தை பூர்த்தி செய்யவில்லை என்றால், அந்த உணவை பரிமாறவோ வழங்கவோ அந்த நிறுவனத்திற்கு உரிமை இல்லை.
நான் தற்போது வெளியே சென்று சாப்பிடுவதை நிறுத்திவிட்டேன். அங்கு சென்றால் நிறைய பாதுகாப்பு பிரச்னைகள் உள்ளன. எனது குடும்பத்தினரும் அடிக்கடி வெளியே செல்வதில்லை. எங்கு செல்ல வேண்டும், எங்கு செல்லக்கூடாது என்பதில் தற்போது அதிக கவனம் செலுத்துகிறோம்.
நான் உணவு பாதுகாப்பு அதிகாரி என்பதால், சாதாரண மக்களுக்கு தெரியாத சில விஷயங்கள்கூட எனக்குத் தெரிந்திருக்கலாம். மற்றவர்களைவிட நான் அதிக விழிப்புணர்வுடன் இருக்கவும் வாய்ப்புள்ளது.
இவ்வாறு துக்காராம் முண்டே கூறினார்.



