சிறிய கோவில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும்: அமைச்சர் ரமேஷ்
3 புரட்டாசி 2026 வியாழன் 10:06 | பார்வைகள் : 230
தமிழகத்தில் உள்ள 52 கோவில்களில் செல்போன்களை பாதுகாப்பாக வைத்துச் செல்வதற்கு ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நடுத்தர மற்றும் சிறிய கோவில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும் என ஹிந்து அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அமைச்சர் ரமேஷ் கூறியதாவது:
எதிர்காலத்தை கருத்தில் கொண்டு கோவில்களில் செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக ரூ.5 கட்டணம் வசூலிக்கப்படுகிறது. எதிர்காலத்தில் நடுத்தர மற்றும் சிறிய கோவில்களுக்கும் செல்போன் தடை விரிவுபடுத்தப்படும்.
சிறிய கோவில்களில் அவற்றின் வருவாயில் இருந்து மட்டுமே செல்போன் பாதுகாப்புக்கான செலவுகளை மேற்கொள்வது சிரமமாக இருக்கும். எனவே, எதிர்காலத்தை கருத்தில் கொண்டு அனைத்து கோவில்களிலும் ஒரே மாதிரியான கட்டணம் வசூலிக்கும் வகையில், குறைந்தபட்ச கட்டணமாக ரூ.5 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
செல்போன்களை பாதுகாப்பாக வைப்பதற்காக வசூலிக்கப்படும் ரூ.5 கட்டணம், கோவிலுக்கு வருவாய் ஈட்டுவதற்காக நிர்ணயிக்கப்பட்டது அல்ல. ஊழியர்கள் மற்றும் தொழில்நுட்ப வசதிகளுக்கான செலவுகளை ஈடுகட்டுவதற்காக மட்டுமே இந்த குறைந்தபட்ச கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
கோவிலுக்கு அருகில் வசிப்பவர்கள் செல்போன்களை வீட்டிலேயே வைத்துவிட்டு கோவிலுக்கு செல்லலாம். வெளியூர்களில் இருந்து வருபவர்கள் செல்போன்களை தங்களது வாகனம் அல்லது தங்குமிடத்தில் வைத்துவிட்டு கோவிலுக்கு செல்லலாம்.
இவ்வாறு அமைச்சர் ரமேஷ் கூறினார்.



