முதல்வர் விஜய் பெயரில் போலி ஏஐ வீடியோ: சிபிசிஐடி விசாரணை
3 புரட்டாசி 2026 வியாழன் 13:18 | பார்வைகள் : 216
முதல்வர் விஜயின் படத்தை பயன்படுத்தி டீப் பேக் தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட போலி வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பரவி வரும் நிலையில், அவற்றை உருவாக்கியவர்களை கண்டுபிடிக்கும் முயற்சியில் சிபிசிஐடி போலீசார் ஈடுபட்டுள்ளனர். இதுபோன்ற மோசடிகளில் இருந்து பொதுமக்கள் கவனமாக இருக்க வேண்டும் என்றும் போலீசார் எச்சரித்துள்ளனர்.
பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில், முதல்வர் விஜய் பேசுவது போன்ற ஏஐ தொழில்நுட்பத்தில் உருவாக்கப்பட்ட வீடியோ ஒன்று பரவி வருகிறது. அதில், பண உதவி தேவைப்படுபவர்கள் குறிப்பிட்ட வாட்ஸ்அப் எண்ணை தொடர்பு கொள்ளும்படி தெரிவிக்கப்பட்டிருந்தது.
ஹிந்தி மொழியில் இடம்பெற்றிருந்த இந்த வீடியோ, சிபிசிஐடி சைபர் குற்றப்பிரிவு போலீசாரின் கவனத்திற்கு வந்தது. இதையடுத்து, நேற்று (செப்டம்பர் 1) வழக்குப்பதிவு செய்த சிபிசிஐடி போலீசார், அந்த வீடியோவை உருவாக்கிய போலி ஐடி குறித்த தகவல்களை வழங்குமாறு மெட்டா நிறுவனத்திடம் கேட்டுக்கொண்டுள்ளனர். மேலும், அந்த வீடியோவை அகற்றுமாறும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
விஜயின் தோற்றத்தை பயன்படுத்தி உருவாக்கப்பட்ட இதுபோன்ற பல ஏஐ வீடியோக்கள் பேஸ்புக் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டு வருகின்றன. இந்த வீடியோக்கள் பாகிஸ்தானில் உருவாக்கப்பட்டிருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.
வீடியோவை உருவாக்கிய குற்றவாளிகளை விரைவில் கைது செய்வதற்கும், போலி வீடியோக்களை அகற்றுவதற்கும் சிபிசிஐடி போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர்.
இதுபோன்ற மோசடி வீடியோக்களில் குறிப்பிடப்படும் தொலைபேசி எண்களை பொதுமக்கள் தொடர்பு கொள்ள வேண்டாம். அவற்றில் குறிப்பிடப்படும் வாட்ஸ்அப் குழுக்களில் இணையவோ அல்லது அவற்றின் மூலம் கூறப்படும் வழிமுறைகளைப் பின்பற்றவோ வேண்டாம் என சிபிசிஐடி போலீசார் எச்சரித்துள்ளனர்.
ஏஐ தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்படும் டீப் பேக் வீடியோக்களில் முதல்வர் விஜய் போன்று ஆள்மாறாட்டம் செய்து வெளியிடப்படும் போலியான பதிவுகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். மேலும், இணைய மோசடிகளில் இருந்து தங்களை பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.



