விமான சேவையில் பாதிப்பு ஏற்படும் அபாயம் – ஊழியர்கள் வேலைநிறுத்தப் போராட்டம்!!
3 புரட்டாசி 2026 வியாழன் 06:32 | பார்வைகள் : 1006
குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான வொலோட்டியா (Volotea) நிறுவனத்தின் பிரான்ஸ் பிரிவில் வெள்ளிக்கிழமை முதல் மூன்று நாட்களுக்கு வேலைநிறுத்தப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. விமானிகள் மற்றும் விமானப் பணியாளர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் SNPL, UNAC மற்றும் SPL ஆகிய மூன்று தொழிற்சங்கங்கள் இந்த வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வொலோட்டியாவின் சில விமானங்கள் ரத்து செய்யப்படவோ அல்லது பாதிக்கப்படவோ வாய்ப்புள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொழிற்சங்கங்கள், ஊழியர்களின் பணிச்சூழல் தொடர்ந்து மோசமடைந்து வருவதுடன், வழங்கப்படும் ஊதியமும் போதுமானதாக இல்லை என குற்றஞ்சாட்டியுள்ளன. ஆரம்பநிலை விமானப் பணியாளர்களான “Second Officers” பெறும் சம்பளம் பிரான்சின் குறைந்தபட்ச ஊதியமான SMIC அளவுக்கு மட்டுமே இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வொலோட்டியாவில் பணியாற்றும் துணை விமானிகள் மற்றும் விமானத் தலைவர்கள், பிரான்ஸில் உள்ள பிற விமான நிறுவனங்களில் பணிபுரியும் சக ஊழியர்களைவிட சராசரியாக 50 சதவீதம் வரை குறைவான ஊதியம் பெறுவதாக தொழிற்சங்கங்கள் கோரியுள்ள சுயாதீன நிபுணர் அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. SNPL தொழிற்சங்கத்தின் பிரதிநிதி Patrick Marciniak, “2012ஆம் ஆண்டுக்குப் பின்னர் ஊதிய அட்டவணை மறுபரிசீலனை செய்யப்படவில்லை” என விமர்சித்துள்ளார்.
அந்தக் காலத்திலிருந்து ஊழியர்கள் எதிர்கொண்ட பணவீக்கம் 25 சதவீதத்துக்கும் அதிகமாக இருந்தபோதிலும், நிறுவனம் அதை கருத்தில் கொள்ளவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், விமானிகள் அதிக பணிச்சுமைக்கு உள்ளாகி வருவதாகவும், விதிமுறைகள் அனுமதிக்கும் அதிகபட்ச அளவான வாரத்திற்கு ஆறு நாட்கள் வரை தொடர்ந்து விமானங்களை இயக்க வேண்டிய நிலை இருப்பதாகவும் தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன. இதுபோன்ற பணிச்சூழல் காரணமாக பல விமானிகள் சில ஆண்டுகளிலேயே நிறுவனத்தை விட்டு வெளியேறுவதாகவும் அவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். 2025ஆம் ஆண்டில் பிரான்ஸில் 7 மில்லியன் பயணிகளை வொலோட்டியா விமான நிறுவனம் சேவையளித்துள்ளது. பிரான்ஸில் 11 விமான நிலையத் தளங்களையும் 290 வெவ்வேறு விமானப் பாதைகளையும் கொண்டுள்ள வொலோட்டியா, தனது மொத்த வர்த்தக நடவடிக்கைகளில் 60 சதவீதத்தை பிரான்ஸிலேயே மேற்கொள்கிறது.



