கொளத்தூர் தேர்தல் வழக்கு: ஸ்டாலின் மனுவை தள்ளுபடி! சென்னை ஐகோர்ட்

கொளத்தூர் தேர்தல் வழக்கு: ஸ்டாலின் மனுவை தள்ளுபடி! சென்னை ஐகோர்ட்

3 புரட்டாசி 2026 வியாழன் 08:22 | பார்வைகள் : 310


சென்னை கொளத்தூர் தொகுதியில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றதை எதிர்த்து, தி.மு.க. வேட்பாளரும், அக்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

கொளத்தூர் தொகுதியில் த.வெ.க. வேட்பாளர் வி.எஸ். பாபு வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக்கோரி ஸ்டாலின் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். தேர்தலில் முறைகேடுகள் நடைபெற்றுள்ளதால், இரண்டாவது இடத்தில் உள்ள தன்னை வெற்றி பெற்றவராக அறிவிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் வலியுறுத்தியிருந்தார்.

இந்த வழக்கை அவசர வழக்காக விசாரிக்க சென்னை ஐகோர்ட் ஏற்கனவே மறுப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில், வழக்கு கடந்த ஆகஸ்ட் 31-ம் தேதி விசாரணைக்கு வந்தது.

அப்போது ஸ்டாலின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கபில் சிபல் வாதிடுகையில், “தேர்தல் வழக்கு தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவான 45 நாட்களுக்கு பிறகே வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டதால், இந்த வழக்கை தாக்கல் செய்வதைத் தவிர வேறு வழியில்லை” என்றார்.

இதற்கு தேர்தல் கமிஷன் தரப்பில், “எம்.எல்.ஏ.வின் வெற்றியை செல்லாது என அறிவிக்கக்கோரி தேர்தல் வழக்கு மட்டுமே தாக்கல் செய்ய முடியும். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக்கொண்டால், இதே கோரிக்கையுடன் மேலும் வழக்குகள் தாக்கல் செய்யப்படலாம். எனவே, இந்த வழக்கை ஏற்கக்கூடாது” என வாதிடப்பட்டது.

இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மனு மீதான தீர்ப்பை தள்ளிவைத்தனர்.

இந்நிலையில், இந்த வழக்கில் இன்று (செப்.3) தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி மற்றும் நீதிபதி அருள் முருகன் ஆகியோர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

கொளத்தூரில் தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வெற்றியை எதிர்த்து ஸ்டாலின் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டது. மேலும், ஸ்டாலின் தாக்கல் செய்த இந்த வழக்கு நிலைக்கத்தக்கது அல்ல என நீதிபதிகள் தங்கள் தீர்ப்பில் தெரிவித்தனர்.

தொடர்ந்து படிக்க