வாகனத் துறை வளர்ச்சியின் தூணாக மாற வேண்டும்: பிரதமர்
4 புரட்டாசி 2026 வெள்ளி 05:14 | பார்வைகள் : 238
நாட்டின் வளர்ச்சியில் போக்குவரத்தை முக்கியத் தூணாக மாற்றும் வகையில், வாகனத் துறை புதிய தொழில்நுட்பங்களை உருவாக்கி, தரத்தை தொடர்ந்து மேம்படுத்த வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி வலியுறுத்தியுள்ளார்.
இந்திய வாகன உற்பத்தியாளர்கள் சங்கமான சியாம் சார்பில் நடைபெற்ற 66-வது ஆண்டு மாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:
நாட்டின் பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருவதால், மக்களின் போக்குவரத்து தேவையும் அதிகரித்து வருகிறது. நெடுஞ்சாலைகள் உள்ளிட்ட உள்கட்டமைப்பு வசதிகள் வேகமாக விரிவடைந்து வருவதன் மூலம், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து எளிதாகி வருகிறது. இதன் மூலம் வாகனத் துறைக்கும் புதிய வாய்ப்புகள் உருவாகியுள்ளன.
மாசற்ற மற்றும் நிலையான போக்குவரத்து அமைப்பை உருவாக்குவதில் நாடு முன்னேறி வரும் நிலையில், அதில் வாகனத் துறை முக்கிய பங்காற்ற வேண்டும். நாடு முழுவதும் மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் வசதிகள் வேகமாக விரிவுபடுத்தப்பட்டு வருவதால், அவற்றின் பயன்பாடும் அதிகரித்து வருகிறது. இதன் மூலம் புதிய கண்டுபிடிப்புகளுக்கான வாய்ப்புகளும் உருவாகியுள்ளன.
அடுத்த தலைமுறை போக்குவரத்தை நோக்கி நாடு பயணிக்கும் நிலையில், வாகனத் துறை அதில் முக்கிய பங்காற்ற வேண்டும்.
தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகளை எளிமைப்படுத்தும் வகையில் தேவையற்ற சட்டங்கள் மற்றும் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு வருவது, தொழில் துறைக்கு புதிய உத்வேகத்தை அளித்துள்ளது. உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம், 'மேக் இன் இந்தியா' உள்ளிட்ட திட்டங்கள் வாகன உற்பத்தித் திறனை வலுப்படுத்தியுள்ளன.
மேலும், சமீபத்தில் மேற்கொள்ளப்பட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் மூலம் சர்வதேச சந்தைகளுக்கான வாய்ப்புகளும் அதிகரித்துள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு கட்டுப்பாடு வரும்
இந்திய வாகனத் துறை மின்சார வாகனங்களின் உற்பத்தி மற்றும் பயன்பாட்டை பெரிய அளவில் ஊக்குவிக்க வேண்டும். குறிப்பாக, நான்கு சக்கர வாகனங்களில் பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்களுக்கு மேலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, மின்சார வாகனங்களுக்கு மாறுவதில் வாகனத் துறை அதிக கவனம் செலுத்த வேண்டும் என பிரதமரின் ஆலோசகர் தருண் கபூர் தெரிவித்துள்ளார்.



