பேச்சுவார்த்தை மூலமே உக்ரைன் போருக்கு தீர்வு: ஜெய்சங்கர்
4 புரட்டாசி 2026 வெள்ளி 06:22 | பார்வைகள் : 245
ரஷ்யாவிடம் இருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்கினாலும், வாங்காமல் இருந்தாலும், உக்ரைன் போர் முடிவுக்கு வராது. பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே இந்தப் போருக்கு தீர்வு காண முடியும் என வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையிலான போர் ஐந்தாவது ஆண்டாக நீடித்து வருகிறது. 2022-ல் போர் தொடங்கியதில் இருந்து, ரஷ்யாவிடம் இருந்து இந்தியா தொடர்ந்து கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது. குறைந்த விலையில் மக்களுக்கு தேவையான எரிசக்தியை பெறும் உரிமை இந்தியாவுக்கு உள்ளது என மத்திய அரசு இதற்கு விளக்கம் அளித்து வருகிறது.
இந்நிலையில், உக்ரைன் சென்றுள்ள வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், அந்நாட்டு அதிபர் வோலோடிமிர் ஜெலன்ஸ்கி மற்றும் வெளியுறவு அமைச்சர் ஆண்ட்ரி சிபிஹாவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
இதையடுத்து நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பில், 'ரஷ்ய எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு எதிராக அமெரிக்கா தடை விதித்தால், ரஷ்யாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை இந்தியா குறைக்குமா?' என ஜெய்சங்கரிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு அவர் அளித்த பதில்:
உலகளவில் எரிசக்தி நிலைமை மிகவும் கடினமாக உள்ள தற்போதைய சூழலில், இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் தேவையான எரிசக்தியை வழங்குவது மிகப்பெரிய சவாலாக உள்ளது.
ஒரு நாடு எண்ணெய், அலுமினியம், கனிமங்கள், உலோகங்கள் அல்லது உரங்களை வாங்குகிறதா, இல்லையா என்பதைப் பொறுத்து, ஐந்து ஆண்டுகளாக நீடித்து வரும் இந்தப் போர் முடிவுக்கு வராது.
பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே இந்தப் போருக்கு தீர்வு காண முடியும். அதற்கான முயற்சிகளை இந்தியா ஊக்குவிக்கும் என ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.



