சட்டம்-ஒழுங்கு விவாதத்தில் கடும் அமளி

சட்டம்-ஒழுங்கு விவாதத்தில் கடும் அமளி

4 புரட்டாசி 2026 வெள்ளி 08:30 | பார்வைகள் : 233


சட்டம்-ஒழுங்கு விவகாரம் தொடர்பாக அமைச்சர்களும், தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்களும் மாறி மாறி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.

சட்டசபையில் நடந்த விவாதம்:

எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி: காவல் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்க இன்னும் மூன்று நாட்கள் அவகாசம் உள்ளது. நன்றாக தயாராகிவிட்டு வாருங்கள்.

சபாநாயகர் பிரபாகர்: முதல்வர் விஜய் கைகளை கட்டிக்கொண்டு அமைதியாக, கூர்ந்து வார்த்தைகளை கவனித்துக் கொண்டிருக்கிறார். பதிலளிக்க அவர் தயாராகவே வந்திருக்கிறார்.

உதயநிதி: இன்னும் தி.மு.க., தான் ஆட்சி செய்கிறது என்பதை மனதில் இருந்து அகற்றிக் கொள்ளுங்கள். தி.மு.க.,வை நோக்கி எதிர்க்கேள்வி கேட்காமல், சம்பந்தமில்லாத குட்டிக் கதைகளை சொல்லாமல், எனது கேள்விகளுக்கு முதல்வர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும்.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: முதல்வர் விஜய்க்கு யாரும் உபதேசம் செய்யத் தேவையில்லை. 2023-24ல், முதல்வராக ஸ்டாலின் இருந்தபோது தாக்கல் செய்யப்பட்ட காவல் துறை கொள்கை விளக்கக் குறிப்பில், 2020, 2021, 2022 ஆகிய மூன்று ஆண்டுகளிலும் 1,597 கொலைகள் நடந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது. மூன்று ஆண்டுகளும் ஒரே எண்ணிக்கையில் கொலைகள் நடக்குமா?

சபாநாயகர் பிரபாகர்: முந்தைய ஆட்சியில் நடந்ததை ஒப்பிட்டு, இன்றைய ஆட்சியாளர்கள் பேசுவதில் தவறு இல்லை.

அமைச்சர் ஆதவ் அர்ஜுனா: கடந்த தி.மு.க., ஆட்சியில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், 'முஸ்லிம் கைதிகளை வெளியே விட்டால், சட்டம் - ஒழுங்கு பாதிக்கப்படும்' எனக் கூறப்பட்டிருந்தது. தி.மு.க., ஆட்சியில் டி.ஜி.பி., கூட நியமிக்கப்படவில்லை.

உதயநிதி: காவல் துறை மானியக் கோரிக்கை விவாதத்திற்கு, அத்துறைக்கு பொறுப்பு வகிக்கும் முதல்வர் விஜய் பதில் அளிப்பதில்லை. அமைச்சர்கள்தான் பேசுகின்றனர்.

சபாநாயகர் பிரபாகர்: அமைச்சரவை என்பது கூட்டுப் பொறுப்பு. எந்த அமைச்சரும் பேசலாம்.

உதயநிதி: டி.ஜி.பி., நியமனத்தில் மத்திய அரசின் தலையீடு இருந்தது. மாநில உரிமையை பாதுகாப்பதில் தி.மு.க., அரசு உறுதியாக இருந்ததால், டி.ஜி.பி., நியமனத்தில் தாமதம் ஏற்பட்டது.

முதல்வர் விஜய்: எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் கேள்விகளுக்கு வரும் திங்கட்கிழமை பதில் அளிக்கிறேன். நான் இங்கே இல்லாவிட்டாலும், யார் யார் என்ன கேட்கின்றனர் என்பது எனக்கு வந்து விடும். அதற்கு தெளிவான விளக்கம் அளிப்பேன். அப்போது யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது.

உதயநிதி: யாரும் ஓடிவிடக் கூடாது என்று சொல்லிவிட்டு, முதல்வர் ஓடிவிட்டார்.

அமைச்சர் ராஜ்மோகன்: தோட்டக்கலை என்றுதான் கேள்விப்பட்டுள்ளோம். ஆனால், தி.மு.க.,வில் தோட்டக் கொலை நடந்துள்ளது. 100 நாட்களில் பாரபட்சம் இல்லாமல், நேர்மையான ஆட்சி நடைபெற்று வருகிறது. துணை முதல்வராக உதயநிதி இருந்தபோது, அவருக்குப் பதிலாக முதல்வராக இருந்த ஸ்டாலின், மானியக் கோரிக்கையை தாக்கல் செய்தார்.

இவ்வாறு சட்டசபையில் விவாதம் நடைபெற்றது.

2 மணி நேரம் அமளி

அமைச்சர்கள் ஆதவ் அர்ஜுனா, ராஜ்மோகன் ஆகியோர் பேசும்போது, தி.மு.க., - எம்.எல்.ஏ.,க்கள் அனைவரும் எழுந்து நின்று கோஷமிட்டனர்.

அப்போது பேசிய ஆதவ் அர்ஜுனா, ''உதயநிதி பேசும்போது, நாங்கள் அமைதியாக இருந்தோம். ஆனால், நாங்கள் பேசும்போது தி.மு.க.,வினர் எழுந்து நின்று கோஷமிடுகின்றனர். உண்மை வெளிவந்து விடும் என தி.மு.க.,வினருக்கு பயம். அதனால், பேச விடாமல் கோஷம் போடுகின்றனர்,'' என்றார்.

இதனால் சட்டசபையில் கடும் அமளி ஏற்பட்டது.

தொடர்ந்து படிக்க