சலுகைக்குப் பின் இந்தியா-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம்
4 புரட்டாசி 2026 வெள்ளி 09:35 | பார்வைகள் : 230
அமெரிக்காவுடன் சலுகை சுங்கவரி நிபந்தனைகள் இறுதி செய்யப்பட்டவுடன், இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, அதன் விவரங்கள் அறிவிக்கப்படும் என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
இந்தியா - அமெரிக்கா இடையே இருதரப்பு வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. எனினும், முழுமையான ஒப்பந்தம் இதுவரை கையெழுத்தாகவில்லை. இந்த ஒப்பந்தம் 99 சதவீதம் நிறைவடைந்துள்ளதாகவும், மீதமுள்ள 1 சதவீதத்தை இறுதி செய்வதற்காக இரு நாடுகளின் அதிகாரிகளும் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது:
எங்களது வர்த்தகப் போட்டியாளர்களுடன் ஒப்பிடும்போது, இந்தியாவுக்கு சாதகமான சுங்கவரி விகிதங்களை வழங்க அமெரிக்கா தயாரானவுடன், இருதரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்து, அதன் விவரங்களை அறிவிப்போம்.
இந்தியா மேற்கொண்டுள்ள ஒன்பது தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள், உலகளாவிய வர்த்தகத்தில் கிட்டத்தட்ட மூன்றில் இரண்டு பங்கிற்கு முன்னுரிமையை வழங்கும்.
அடுத்த சில மாதங்களிலும், ஓரிரு ஆண்டுகளிலும் கனடா, மெக்சிகோ, சிலி உள்ளிட்ட நாடுகளுடன் இந்தியா மேற்கொள்ளவுள்ள தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களும், ஆசியான், கொரியா மற்றும் ஜப்பான் உடனான வர்த்தக ஒப்பந்தங்களை மறுஆய்வு செய்வதற்கான முயற்சிகளும், உலக வர்த்தகத்தில் இந்தியாவுக்கு நல்ல வாய்ப்புகளை உருவாக்கும்.
நியூசிலாந்துடனான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் நடைமுறைக்கு வரும். அதைத் தொடர்ந்து, 27 நாடுகளை உள்ளடக்கிய ஐரோப்பிய ஒன்றியத்துடனான தடையற்ற வர்த்தக ஒப்பந்தமும் நடைமுறைக்கு வரும்.
இவ்வாறு பியூஷ் கோயல் கூறினார்.
இந்தியா ஏற்கனவே இங்கிலாந்து, மொரிஷியஸ், ஓமன், ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஆஸ்திரேலியாவுடன் வர்த்தக ஒப்பந்தங்களை செயல்படுத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.



