ரஷ்யா-உக்ரைன் போரை முடிக்க இந்தியா தயார்: ஜெய்சங்கர்
4 புரட்டாசி 2026 வெள்ளி 10:39 | பார்வைகள் : 192
ரஷ்யா - உக்ரைன் இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர எந்த வகையிலாவது உதவி தேவைப்பட்டாலும், அதனை செய்ய இந்தியா தயாராக உள்ளது என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.
ரஷ்யா - உக்ரைன் இடையே நீண்ட ஆண்டுகளாக போர் நீடித்து வருகிறது. அமெரிக்கா மேற்கொண்ட முயற்சிகளுக்குப் பின்னரும் மோதல் முடிவுக்கு வரவில்லை. பேச்சுவார்த்தை மூலம் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும் என இந்தியா தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. இதற்கிடையே, கருங்கடல் பகுதியில் இந்திய கடல் மாலுமிகள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் உக்ரைன் மற்றும் போலந்து நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இன்று உக்ரைன் வெளியுறவு அமைச்சர் ஆன்ட்ரில் சிபிஹாசவை அவர் சந்தித்துப் பேசினார்.
கீவ் நகரில் செய்தியாளர்களிடம் ஜெய்சங்கர் கூறியதாவது:
உக்ரைன் - ரஷ்யா இடையிலான மோதலை முடிவுக்கு கொண்டு வர இந்தியா எந்த வகையிலாவது உதவ வேண்டும் என்றால், அதனை செய்ய தயாராக இருக்கிறோம். கருங்கடல் பகுதியில் வணிகக் கப்பல்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்தும் விவாதித்தேன்.
இவ்வாறு ஜெய்சங்கர் கூறினார்.



