எந்த கட்சி குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் விஜய் சர்கார்; அமைச்சர் ராஜ்மோகன்
4 புரட்டாசி 2026 வெள்ளி 12:06 | பார்வைகள் : 257
எந்தக் கட்சி குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் வகையில் விஜய் அரசு செயல்பட்டு வருகிறது என அமைச்சர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:
உண்மை எப்போதும் சத்தமாக பேசும். சட்டம்-ஒழுங்கில் சிறப்பான இடத்தை நோக்கி தமிழ்நாடு சென்று கொண்டிருக்கிறது. அரசியல் தலையீடு இல்லாத நிர்வாகமும், ஆளுங்கட்சி தலையீடு இல்லாத காவல்துறையும் செயல்பட்டு வருகின்றன. எந்தக் கட்சி குற்றம் செய்தாலும் நடவடிக்கை எடுக்கும் விஜய் அரசு நடந்து கொண்டிருக்கிறது.
மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். நீங்கள் நன்றாகப் படியுங்கள். எந்த அச்சமும் வேண்டாம். இந்த அரசை பொறுத்தவரை கல்வித்துறை முதல் காவல்துறை வரை அரசியல் தலையீடு இல்லாமல் நடுநிலையாக செயல்பட்டு வருகிறது.
பெண்களுக்கு சிறப்பான பாதுகாப்பு அளிக்க தொடர்ந்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். வரலாற்றுச் சிறப்புமிக்க இந்த ஆட்சியில், வெறும் 100 நாட்களில் எந்த வகையிலும் பாரபட்சம் இல்லாமல், மிகவும் நேர்மையாக ஆட்சி நடைபெற்று வருகிறது. இது நீதியின் ஆட்சி.
இவ்வாறு ராஜ்மோகன் பேசினார்.
'பெரிய காது குத்து!'
மேலும் அமைச்சர் ராஜ்மோகன் பேசியதாவது:
'நீட் ரகசியம் எனக்குத் தெரியும்' என 5 ஆண்டுகளாக கூறியது தான் பெரிய காது குத்து. சட்டம்-ஒழுங்கு பாதுகாக்கப்படும் என்பது ஒரு காது குத்து; பெண்கள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்பதும் ஒரு காது குத்து.
உலகம் முழுவதும் போதைப்பொருட்களை ஒழிக்கத்தான் அனைத்து அரசுகளும் போராடி வருகின்றன. போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட ஜாபர் சாதிக்கை தி.மு.க., அயலக அணியில் வைத்திருந்தது. வரலாற்றை மறக்கக் கூடாது.
இவ்வாறு ராஜ்மோகன் கூறினார்.



