கேள்விகளுக்கு திங்கட்கிழமை பதில்: முதல்வர் விஜய்

கேள்விகளுக்கு திங்கட்கிழமை பதில்: முதல்வர் விஜய்

4 புரட்டாசி 2026 வெள்ளி 13:16 | பார்வைகள் : 278


எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் கேள்விகளுக்கு சட்டசபையில் திங்கட்கிழமை பதில் அளிப்பேன். ஆனால், அன்று யாரும் ஓடிவிட மாட்டோம் என பிராமிஸ் செய்ய வேண்டும் என்று உதயநிதி பேசி முடித்ததும், முதல்வர் விஜய் பதில் அளித்துவிட்டு சட்டசபையில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.

சட்டசபையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேசியதாவது:

எங்களது ஆட்சியில் அதிக போக்சோ வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் குற்றச்சாட்டு வைத்துள்ளார். கடந்த 2 ஆண்டுகளாக சட்டம்-ஒழுங்கு பிரச்னைக்கு அரசை குறை கூறிய கட்சி, தற்போது ஆட்சிக்கு வந்ததும் தனிமனித ஒழுக்கம்தான் காரணம் என கூறுகிறது.

மக்கள் எங்களுக்கு கேள்வி கேட்கும் பொறுப்பை வழங்கியுள்ளனர். சரியான கேள்விகளை கேட்டு, அரசிடம் பதில் பெற வேண்டிய இடத்தில் நாங்கள் இருக்கிறோம். எனவே, லாஜிக்கே இல்லாத குட்டிக் கதைகளை கூறாமல், முதல்வர் நேரடியாக பதில் அளிக்க வேண்டும்.

ரீல்ஸ் கண்டென்டுக்காக இல்லாமல், ரோல் கேமரா ஆக்ஷன் இல்லாமல், டேக் டைவர்ஷன் இல்லாமல் பதில் அளிக்க வேண்டும்.

இவ்வாறு உதயநிதி பேசினார்.

விஜய் பதிலடி

உதயநிதி பேசி முடித்ததும் முதல்வர் விஜய் அளித்த பதில்:

எம்.எல்.ஏ.,க்கள் கேட்கும் அனைத்து கேள்விகளுக்கும் சட்டசபையில் தெளிவான விளக்கத்தை திங்கட்கிழமை அளிக்கிறேன். நான் இங்கே இல்லை என்றாலும், யார் யார் என்ன கேள்வி கேட்கிறார்கள் என்பது எனக்கு வந்து விடும்.

அனைத்து கேள்விகளுக்கும் தெளிவான பதிலை அளிக்கிறேன். உங்கள் (சபாநாயகர்) சார்பாக அவர்களிடம் (எதிர்க்கட்சி) ஒரு பிராமிஸ் கேட்கிறேன். அன்று யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது.

என்று முதல்வர் விஜய் கூறிவிட்டு புறப்பட்டுச் சென்றார்.

உதயநிதி பதில்

இதற்கு உதயநிதி கூறியதாவது:

இதைச் சொல்லிவிட்டு யார் ஓடிப்போனது என்பதை மக்கள் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். அதை டி.வி.,யில் காட்டினார்களா என்பது தெரியவில்லை. இந்த பதிலை ஒரு மணி நேரத்திற்கு முன்பே முதல்வர் தெரிவித்திருந்தால், இந்த பிரச்னை வந்திருக்காது.

முதல்வரின் பதிலுரைக்கு இன்னும் 3 நாட்கள் இருக்கின்றன. மீண்டும் எங்கள் மீது பலி போடாமல், கேட்கப்பட்ட கேள்விகளுக்கு விளக்கம் அளியுங்கள். நன்றாகத் தயாராகிவிட்டு வாருங்கள்.

என்று உதயநிதி கூறினார்.

'தரமான பதிலடி'

உடனே, ''அவர் ஏற்கனவே தயாராகித்தான் வந்திருக்கிறார்'' என சபாநாயகர் கூறினார்.

இதற்கு உதயநிதி, ''அப்படி என்றால் இப்போதே அவர் பதிலளிக்கலாம்'' என்றார்.

தரமான பதிலடி முதல்வர் மூலமாக தரப்படும் என அமைச்சர் ராஜ்மோகன் திட்டவட்டமாக தெரிவித்தார்.

தொடர்ந்து படிக்க