கேள்விகளுக்கு முதல்வர் விஜய் நேரடியாக பதிலளிக்க வேண்டும்: உதயநிதி
4 புரட்டாசி 2026 வெள்ளி 14:21 | பார்வைகள் : 220
பதில் சொல்ல வேண்டிய இடத்தில் த.வெ.க., அரசு உள்ளது. எனவே, தான் கேட்ட கேள்விகளுக்கு விதண்டாவாதமாக பேசாமல், முதல்வர் விஜய் நேரடியாக பதிலளிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி தெரிவித்துள்ளார்.
சட்டசபையில் அவர் பேசியதாவது:
த.வெ.க., அரசு பொறுப்பேற்று 116 நாட்களில், பெயர் மாற்றம் மற்றும் திட்டங்களை கைவிடுவது தொடர்பான அறிவிப்புகள்தான் அதிகமாக வந்துள்ளன.
'தாய் மாமன் சீர் திட்டம், தாய் மாமன் தங்க மோதிரம்' என திட்டங்களுக்கு பெயர் வைத்துள்ளீர்கள். மொத்தமாக, 'தாய் மாமன் காது குத்தும் திட்டம்' என பெயர் வைப்பதே பொருத்தமாக இருக்கும்.
கடந்த 116 நாட்களில் த.வெ.க., ஆட்சியில் 200 கொலைகள், 300 பாலியல் வன்கொடுமை சம்பவங்கள், 10 ஆணவப் படுகொலைகள், 8 காவல் மரணங்கள் உட்பட 550 குற்ற சம்பவங்கள் நடந்துள்ளன.
த.வெ.க., அரசை விமர்சிப்பவர்களை கைது செய்யும் அரசு, முதல்வர் விஜய் மீது கடுமையான விமர்சனத்தை முன்வைத்த பா.ஜ., தலைவர் மீது வழக்குப் பதிவு செய்யவில்லை. பா.ஜ., அடித்தாலும் வலிக்காதது போல த.வெ.க., அரசு செயல்படுகிறது.
மருத்துவப் படிப்புக்கான 'நீட்' தேர்வுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்றபோதும், சென்னையில் மெரினா மற்றும் பெசன்ட் நகர் கடற்கரைகளில் போராட்டம் நடத்த அனுமதிக்கப்படவில்லை. மெரினா கடற்கரைக்கு பூட்டு போட்ட ஒரே அரசு த.வெ.க., அரசுதான்.
சட்டம்-ஒழுங்கு பிரச்னைகளால் தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவுக்கு அசாதாரண சூழ்நிலை நிலவி வருகிறது. அரசை நோக்கி கேள்வி கேட்கும் இடத்தில் தி.மு.க., உள்ளது.
பதில் சொல்ல வேண்டிய இடத்தில் த.வெ.க., அரசு உள்ளது. எனவே, நான் கேட்ட கேள்விகளுக்கு விதண்டாவாதமாக பேசாமல், முதல்வர் விஜய் நேரடியாக பதிலளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.



