வாரணாசி; மீட்பு, நிவாரண பணிகளை முடுக்கி விட்ட பிரதமர் மோடி
4 புரட்டாசி 2026 வெள்ளி 15:50 | பார்வைகள் : 251
தனது சொந்தத் தொகுதியான உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்து பிரதமர் மோடி, அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
தொடர் கனமழை காரணமாக உத்தரபிரதேச மாநிலத்தின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. சாலைகளில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளதால், போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், வீடுகளுக்குள் வெள்ளநீர் புகுந்துள்ளதால், பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகியுள்ளனர்.
குறிப்பாக, கங்கை ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. கங்கையில் வெள்ளம் அபாயக் கட்டத்தை தாண்டி செல்வதால், கரையோர மக்கள் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு, தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்கள் அங்கு தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், பிரதமர் மோடி தனது சொந்தத் தொகுதியான வாரணாசியில் ஏற்பட்டுள்ள வெள்ள பாதிப்புகள் குறித்து, மாவட்ட கலெக்டர் சத்யேந்திர குமாரை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார். நிவாரண முகாம்களில் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள், கங்கை ஆற்றில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவை குறித்து அவர் விரிவாக கேட்டறிந்தார்.
அப்போது, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தாமதமின்றி அனைத்து அவசர தேவைகளையும் பூர்த்தி செய்வதுடன், நிவாரணப் பணிகளையும் போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு மாவட்ட நிர்வாகத்திற்கு பிரதமர் மோடி உத்தரவிட்டார்.



