நிதி நெருக்கடிக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அவசியம் தானா?
5 புரட்டாசி 2026 சனி 06:01 | பார்வைகள் : 230
நிதி நெருக்கடிக்கு மத்தியில் புதிய தலைமைச் செயலகம் அவசியம் தானா? என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், அதுகுறித்த விரிவான தகவல்களை காண்போம்.
105 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட சட்டசபை
105 ஆண்டுகள் பாரம்பரியம் கொண்ட தமிழக சட்டசபை வரலாற்றில், நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு மெட்ராஸ் மாகாணமாக இருந்த காலத்திலேயே, 1921-ம் ஆண்டு ஜனவரி 9-ந் தேதி முதன்முறையாக புனித ஜார்ஜ் கோட்டையில் சட்டசபை கூட்டம் நடைபெற்றது.
இடையில், செனட் ஹவுஸ் (1937-1938), ராஜாஜி அரங்கம் (1938-1939), கலைவாணர் அரங்கம் (1952-1956), அரன்மோர் அரண்மனை, ஊட்டி (1959-ல் 10 நாட்கள்), ஓமந்தூரார் அரசினர் தோட்டம் (2010-2011) ஆகிய இடங்களுக்கு சட்டசபை கூட்டம் இடம்மாறியது. ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் செயல்பட்ட கட்டிடம் தற்போது பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையாக உள்ளது.
எனினும், கடந்த 98 ஆண்டுகளாக புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள சட்டசபை கூட்ட அரங்கத்திலேயே தொடர்ந்து கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன.
ரூ.1,200 கோடியில் புதிய தலைமைச் செயலகம்
இந்த நிலையில், சட்டசபையில் நேற்று முதல்-அமைச்சர் ஜோசப் விஜய், புதிய தலைமைச் செயலகம் கட்டுவது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டார்.
அதன்படி, "நவீன வசதிகளுடன் கூடிய சட்டமன்றம் மற்றும் தலைமைச் செயலகம் அடங்கிய புதிய கட்டிட வளாகம் சென்னையில் 20 லட்சம் சதுர அடி பரப்பளவில் ரூ.1,200 கோடி மதிப்பீட்டில் உருவாக்கப்படும்" என்று அவர் அறிவித்தார்.
புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்காக பட்டினப்பாக்கம் போர் ஷோர் எஸ்டேட், கிண்டி நெருஞ்சாலை ஆராய்ச்சி நிலைய வளாகம், கிண்டி ரேஸ்கோர்ஸ் மற்றும் நந்தம்பாக்கம் பகுதியில் உள்ள அரசு இடம் ஆகியவை பரிசீலனையில் உள்ளன.
நிதி நெருக்கடியில் அவசியமா?
தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடிக்கும் அதிகமாக கடன் இருக்கும் சூழ்நிலையில், புதிய தலைமைச் செயலகம் அவசியம் தானா? என்ற கேள்வி எழுவது இயல்பானது.
தமிழ்நாட்டில் மக்கள்தொகைக்கு ஏற்ப சட்டமன்ற தொகுதிகள் வரையறை செய்யப்பட்டு வருகின்றன. தற்போது 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் தமிழகத்தில் 234 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன.
சட்டமன்ற தொகுதிகள் அதிகரிக்கும் நிலை
15 ஆண்டுகளுக்குப் பிறகு, தற்போது தமிழகத்தில் மக்கள்தொகை கணக்கெடுப்பு பணி நடைபெற உள்ளது. தமிழகத்தின் மக்கள்தொகை 8 கோடியை கடந்திருக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ள நிலையில், சட்டமன்ற தொகுதிகளின் எண்ணிக்கை 120 அதிகரிக்கக்கூடும் என்று தெரிகிறது.
அதன்படி, தற்போது உள்ள 234 தொகுதிகள் 354 ஆக அதிகரிக்கும் நிலை ஏற்படலாம்.
புனித ஜார்ஜ் கோட்டையில் உள்ள தற்போதைய தமிழக சட்டசபை கூட்ட அரங்கத்திலேயே 234 சட்டமன்ற உறுப்பினர்களும் நெருக்கடியான நிலையில்தான் அமர வைக்கப்பட்டுள்ளனர். இதுதவிர, சபாநாயகர் இருக்கைக்கு வலதுபுறம் அரசு அதிகாரிகள் அமரும் பகுதியும், இடதுபுறம் பத்திரிகையாளர்கள் அமரும் பகுதியும் போதிய விசாலத்துடன் இல்லை.
பிரிந்து கிடக்கும் 55 துறை அலுவலகங்கள்
எதிர்காலத்தில் சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கை 354 ஆக உயரும்போது, தற்போதைய சட்டசபை கூட்ட அரங்கம் நிச்சயம் போதுமானதாக இருக்காது. அந்த நேரத்தில் புதிய தலைமைச் செயலகம் கட்டுவதற்கான தேவை கண்டிப்பாக ஏற்படும்.
எனவே, எதிர்கால தேவையை கருத்தில் கொண்டு இப்போதே புதிய தலைமைச் செயலக கட்டிடம் கட்டுவது தேவையான ஒன்றுதான் என்ற கருத்தும் உள்ளது.
தமிழக அரசின் கீழ் 55 துறைகள் உள்ளன. இந்த துறைகளுக்கான அலுவலகங்கள் தலைமைச் செயலகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை, மெரினா கடற்கரையில் உழைப்பாளர் சிலைக்கு எதிரே உள்ள எழிலகம் கட்டிடம் மற்றும் சைதாப்பேட்டையில் உள்ள பனகல் மாளிகை ஆகிய இடங்களில் பிரிந்து செயல்பட்டு வருகின்றன.
இந்த அலுவலகங்களை ஒரே இடத்தில் ஒருங்கிணைப்பது நிர்வாக வசதிக்கு ஏதுவாக இருக்கும்.
ஓமந்தூரார் அரசினர் தோட்டம்
2006-2011-ம் ஆண்டு காலகட்டத்தில் ஆட்சி பொறுப்பில் இருந்த தி.மு.க. அரசு, ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை கட்டியது. அந்த கட்டிடத்தில் சுமார் ஓராண்டு காலம் (2010-2011) சட்டசபை கூட்டமும் நடைபெற்றது.
ஆனால், 2011-ம் ஆண்டு ஆட்சி மாற்றத்துக்குப் பிறகு பொறுப்பேற்ற அ.தி.மு.க. அரசு, புதிய தலைமைச் செயலக கட்டிடத்தை பன்னோக்கு அரசு சிறப்பு மருத்துவமனையாக மாற்றிவிட்டு, மீண்டும் சட்டசபையை தற்போதைய புனித ஜார்ஜ் கோட்டை வளாகத்துக்கே மாற்றியது.
சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும்
எனவே, புதிதாக ஆட்சி பொறுப்பேற்றுள்ள த.வெ.க. அரசு புதிதாக அமைக்க உள்ள தலைமைச் செயலக கட்டிடத்தையாவது, எதிர்காலத்தில் அரசியல் காரணங்களுக்காக மாற்றியமைக்காத வகையில், கட்டப்பட்ட இடத்திலேயே தொடர்ந்து செயல்படும் வகையில் சட்டப் பாதுகாப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
மற்றொரு புறம், கிண்டியில் உள்ள அரசு பன்னோக்கு மருத்துவமனையை மேலும் தரம் உயர்த்தி, ஓமந்தூரார் மருத்துவமனையில் உள்ள டாக்டர்கள், பணியாளர்கள் மற்றும் நோயாளிகளை அங்கு மாற்றிவிட்டு, மீண்டும் ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள அதே கட்டிடத்தை தலைமைச் செயலகமாக மாற்றலாம் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.



