அனைத்து துறைகளிலும் தமிழகம் முன்னோடியாக வேண்டும்: செங்கோட்டையன்
5 புரட்டாசி 2026 சனி 07:08 | பார்வைகள் : 199
இந்தியாவிலேயே தமிழகம் அனைத்து துறைகளிலும் முன்னோடியாக மாற வேண்டும் என்பதே முதல்வர் விஜய்யின் எண்ணம் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.
சென்னை விமான நிலையத்தில் நிருபர்களிடம் அமைச்சர் செங்கோட்டையன் கூறியதாவது:
பொதுவாக தமிழகத்தில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. தமிழகத்தின் வளர்ச்சிக்காக தமிழக வெற்றி கழகத்தின் தலைவர், முதல்வர் விஜய் எடுத்து வைக்கும் ஒவ்வொரு நடவடிக்கையையும் தமிழக மக்கள் கூர்ந்து கவனித்து வருகின்றனர்.
உலக நாடுகளில் வசிக்கும் தமிழர்களும் இதனை கூர்ந்து கவனித்து வருகின்றனர். தமிழகத்தில் முதன்முறையாக மாற்றுத் தலைவராக நேற்று முன்தினம் ஒரு பெண் சட்டசபையில் அவையை நடத்தினார். அதேபோல், நேற்று இஸ்லாமிய சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு அவையை நடத்தும் வாய்ப்பு உருவாக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் முதன்முறையாக இதுபோன்ற நடவடிக்கைகள் பின்பற்றப்பட்டு வருகின்றன. ‘எல்லாரும் எல்லாம் பெற வேண்டும்’ என்பதுதான் முதல்வர் விஜய்யின் நோக்கம். அந்த நோக்கத்தில்தான் கடந்த இரண்டு நாட்களாக சட்டசபையில் இந்த நிகழ்வுகள் நடைபெற்றுள்ளன. இதனை நான் மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழகத்தை சிறந்த முறையில் வழிநடத்திச் செல்லக்கூடிய முதல்வராக விஜய் இருக்கிறார். தமிழகம் இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் முன்னோடியாக மாற வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு உள்ளது. அதுதான் அவரது மனதில் இருக்கும் எண்ணங்கள்.
இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.



