இந்திய எச்சரிக்கையை புறக்கணித்த ஐரோப்பா: பெல்ஜியம் பிரதமர்
5 புரட்டாசி 2026 சனி 08:09 | பார்வைகள் : 1165
இந்தியாவின் பொருளாதார சார்புநிலை குறித்த எச்சரிக்கையை ஐரோப்பா முன்கூட்டியே புறக்கணித்துவிட்டதாக பெல்ஜியம் பிரதமர் பார்ட் டி வெவர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்துள்ள பெல்ஜியம் பிரதமர் டி வெவர், டெல்லியில் நடைபெற்ற தொழில் கூட்டமைப்பின் மாநாட்டில் பங்கேற்றார்.
அப்போது அவர் பேசியதாவது:
ஐரோப்பாவில் கடந்த சில ஆண்டுகளாக தீவிரமான விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. நீண்ட காலமாக நமது சந்தைகளில் உற்பத்தி செலவை விட குறைவான விலையில் அதிகப்படியான உற்பத்தித் திறன் குவிக்கப்பட்டு வருகிறது. இதனால் உள்நாட்டு தொழில்கள் பாதிக்கப்பட்டதுடன், வெளிநாட்டு விநியோகஸ்தர்களை அதிகளவில் சார்ந்திருக்கும் நிலை ஐரோப்பாவுக்கு ஏற்பட்டது.
இந்த நிலைமையை நம்மைவிட முன்பாகவே இந்தியா கண்டறிந்தது. அது குறித்து இந்தியா நம்மை எச்சரித்தது. ஆனால், நாம் அந்த எச்சரிக்கையை கேட்கவில்லை. பொருளாதார உறவுகள் அரசியல் அழுத்தக் கருவிகளாக மாற்றப்படும் சாத்தியம் உள்ளிட்ட, இதுபோன்ற சார்புநிலையை அனுமதிப்பதால் ஏற்படும் விளைவுகளை தற்போது ஐரோப்பா எதிர்கொண்டு வருகிறது.
இது தொடர்பாக ஐரோப்பாவை நீண்ட காலத்திற்கு முன்பே பிரதமர் மோடி எச்சரித்திருந்தார். ஆனால், அவரது எச்சரிக்கை புறக்கணிக்கப்பட்டது. அவர் கூறியதை நாம் கேட்கவில்லை. ஆனால், தற்போது நாங்கள் செவிசாய்க்கிறோம்.
புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை நிலவும் இந்த நேரத்தில், இந்தியாவை மிகவும் முக்கியமான மற்றும் நம்பகமான கூட்டாளியாக பெல்ஜியம் கருதுகிறது.
இவ்வாறு அவர் பேசினார்.



