பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்தால் சலுகைகள் ரத்து?

பதவி நீக்கத்தை தவிர்க்க ராஜினாமா செய்தால் சலுகைகள் ரத்து?

5 புரட்டாசி 2026 சனி 09:14 | பார்வைகள் : 257


அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்கள், பதவி நீக்க நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காக ராஜினாமா செய்தால், அவர்களுக்கு வழங்கப்படும் சலுகைகள் மற்றும் ஓய்வூதியப் பலன்களை ரத்து செய்யக் கோரிய வழக்கில், மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

‘அரசியலமைப்பு சார்ந்த பதவியில் உள்ளவர்கள், பதவி நீக்க நடவடிக்கையைத் தவிர்க்க ராஜினாமா செய்யும் பட்சத்தில், அவர்களுக்கான அனைத்து விதமான உதவிகள், சலுகைகள், வசதிகள் மற்றும் ஓய்வூதியப் பலன்களை ரத்து செய்ய வேண்டும்’ எனக் கோரி, பிரதிக் வீரா என்பவர் உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.

மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

பதவி நீக்க நடவடிக்கைகள் அல்லது நம்பிக்கையில்லா தீர்மான நடவடிக்கைகளைத் தவிர்க்கும் நோக்கில், ராஜினாமா செய்யும் அரசியலமைப்பு சார்ந்த பதவிகளில் உள்ளவர்கள், தாங்கள் வகித்த அந்தப் பதவியுடன் தொடர்புடைய சலுகைகள் மற்றும் பிற வசதிகளைப் பெற தகுதியற்றவர்கள்.

பதவி நீக்க நடவடிக்கைகளைத் தவிர்ப்பதற்காகவே இவர்கள் ராஜினாமா செய்கின்றனர் என்ற பொதுவான கருத்து மக்களிடையே நிலவுகிறது. ராஜினாமா செய்த பின்னரும், தாங்கள் வகித்த பதவியுடன் தொடர்புடைய சலுகைகள் மற்றும் வசதிகளை அவர்கள் தொடர்ந்து பெறுகின்றனர். இது அரசியலமைப்புக்கு முரணானது.

அரசியலமைப்பு சார்ந்த பதவிகளில் உள்ளவர்கள், தங்களது பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்வதன் மூலம் பொது வாழ்வில் நேர்மையை வெளிப்படுத்த வேண்டும். தேவைப்பட்டால், நாட்டிற்காக பணியாற்றும் பிற ஊழியர்களைப் போலவே பதவி நீக்க நடவடிக்கைகளையும் எதிர்கொள்ள வேண்டும்.

எனவே, அரசியலமைப்பு ரீதியாக நிர்ணயிக்கப்பட்ட பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்பாக ராஜினாமா செய்யும் அரசியலமைப்பு பதவிகளில் உள்ளவர்களுக்கு சலுகைகள் அல்லது வசதிகள் வழங்கக்கூடாது.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு, தலைமை நீதிபதி சூர்யகாந்த், நீதிபதிகள் ஜாய்மால்யா பக்சி மற்றும் வி.மோகனா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள் வாதிடுகையில், ‘‘சாதாரண அரசு ஊழியர்கள் அல்லது அரசியலமைப்பு சாராத பதவிகளை வகிப்பவர்கள் மீது துறைரீதியான விசாரணையோ அல்லது பதவி நீக்க நடவடிக்கையோ நிலுவையில் இருந்தால், அவர்கள் ராஜினாமா செய்ய சட்டத்தில் அனுமதி இல்லை.

ஆனால், அவர்களை விட மிக உயர்ந்த பொறுப்பில் இருக்கும் அரசியலமைப்பு நிர்வாகிகள் மட்டும் விசாரணைக்கு பயந்து எளிதாக ராஜினாமா செய்து தப்பிப்பது நியாயமற்றது.

பதவிக்காலத்தை முழுமையாக நிறைவு செய்யாமல், பதவி நீக்கத்திற்கு பயந்து பாதியிலேயே விலகும் நபர்களுக்கு முழு சலுகைகளையும் வழங்கும் விதிகள் செல்லாது என அறிவிக்க வேண்டும்’’ என்று வாதிட்டனர்.

இதையடுத்து, இந்த மனு தொடர்பாக விரிவான அறிக்கை அளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

தொடர்ந்து படிக்க