லடாக்கில் தடுப்பணை கட்டிய இந்தியா

லடாக்கில் தடுப்பணை கட்டிய இந்தியா

5 புரட்டாசி 2026 சனி 10:16 | பார்வைகள் : 239


சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா நிறுத்திவைத்துள்ள நிலையில், லடாக்கில் 10 அடி உயரம் கொண்ட தடுப்பணை ஒன்றை இந்தியா கட்டியுள்ளது. சிமென்ட் பயன்படுத்தாமல் இயற்கையான பாறாங்கற்களைக் கொண்டு இந்த தடுப்பணை கட்டப்பட்டுள்ளது.

காஷ்மீரின் பஹல்காமில் நடைபெற்ற பயங்கரவாத தாக்குதலைத் தொடர்ந்து, பாகிஸ்தானுடனான சிந்து நதிநீர் ஒப்பந்தத்தை இந்தியா ரத்து செய்துள்ளது. பாகிஸ்தான் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை கைவிடும் வரை, இந்த ஒப்பந்தம் மீண்டும் அமல்படுத்தப்படாது என இந்தியா தெரிவித்துள்ளது.

ஒப்பந்தம் நிறுத்தப்பட்டுள்ள நிலையில், பாகிஸ்தானுக்கு செல்லும் நீரை இந்தியாவின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் முயற்சிகளில் மத்திய அரசு ஈடுபட்டு வருகிறது.

பல ஆண்டுகளாக வசந்த காலங்களில் நீர்மட்டம் குறைவாக இருப்பதாலும், சிந்து நதிநீர் ஒப்பந்தத்தின் கீழ் தண்ணீர் பாகிஸ்தானுக்கு சென்றதாலும், அப்பகுதி விவசாயிகள் பயிர் செய்வதில் சிரமங்களை எதிர்கொண்டனர். விளைநிலங்கள் வறண்டு போனதால், விவசாயிகள் பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டனர்.

தற்போது, சிந்து நதிநீரை இந்தியாவின் பயன்பாட்டுக்கு கொண்டு வரும் வகையிலான பணிகளை மத்திய அரசு முடுக்கிவிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக, லடாக்கின் உப்ஷியில் ஆற்றின் குறுக்கே தடுப்பணை ஒன்றை மத்திய அரசு கட்டியுள்ளது.

10 அடி உயரம் கொண்ட இந்த தடுப்பணை சிமென்ட் பயன்படுத்தாமல் பாறாங்கற்களைக் கொண்டு கட்டப்பட்டுள்ளது. இதில் 4 கோடி லிட்டர் தண்ணீரை சேமித்து வைக்க முடியும். பின்னர், அந்த நீரை பாசனக் கால்வாய் மூலம் வறண்ட கிராமங்களுக்கு கொண்டு சென்று விவசாயத்திற்கு பயன்படுத்த முடியும்.

சிந்து நதிநீர் பாகிஸ்தானுக்குள் பாய்வதற்கு முன்பாக, இந்திய எல்லைப் பகுதிக்குள் அந்த நீரை மக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான உள்கட்டமைப்புகளை இந்தியா உருவாக்கி வருகிறது என்பதை இந்த தடுப்பணை நிரூபித்துள்ளதாக கூறப்படுகிறது.

சிந்து நதியின் மீது இதுபோன்ற மேலும் பல தடுப்பணைகளை கட்ட லடாக் நிர்வாகம் திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகள் மற்றும் நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட நடவடிக்கைகள் விரைவாக நடைபெற்று வருகின்றன.

தொடர்ந்து படிக்க