ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க டிரம்ப் விருப்பம்: அமெரிக்க தூதர்

ஜி-20 மாநாட்டில் பிரதமர் மோடியை சந்திக்க டிரம்ப் விருப்பம்: அமெரிக்க தூதர்

5 புரட்டாசி 2026 சனி 11:25 | பார்வைகள் : 235


அமெரிக்காவில் வரும் டிசம்பரில் நடைபெற உள்ள ‘ஜி-20’ நாடுகளின் உச்சி மாநாட்டில், அதிபர் டொனால்டு டிரம்ப் சந்திக்க விரும்பும் தலைவர்களின் பட்டியலில் பிரதமர் மோடிக்கு முதலிடம் இருக்கும் என்று இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவின் புளோரிடாவில் வரும் டிசம்பர் 14 மற்றும் 15-ந் தேதிகளில் ‘ஜி-20’ நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இதில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார்.

இதுகுறித்து இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் கூறியதாவது:

‘ஜி-20’ மாநாட்டில் உலக நாடுகளைச் சேர்ந்த 35 தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். இதில் யாரை சந்திக்க விரும்புகிறீர்கள் என்று அதிபர் டிரம்பிடம் கேட்டால், அந்தப் பட்டியலில் பிரதமர் மோடிக்குத்தான் முதலிடம் இருக்கும்.

அதிபர் டிரம்ப், பிரதமர் மோடியை ஒரு நண்பராகக் கருதுகிறார். எனவே, அவரது பயணம் குழு சந்திப்பைத் தாண்டி மேலும் பல விஷயங்களை உள்ளடக்கியதாக இருக்கும் என எதிர்பார்க்கிறேன்.

அதிபர் டிரம்புடன் பேசும் போதெல்லாம், கடந்த 2020-ம் ஆண்டு இந்தியாவுக்கு அரசு முறைப் பயணமாக வந்ததை அற்புதமான நிகழ்வு என்று குறிப்பிடுவார். மேலும், தனது நெருங்கிய நண்பரான பிரதமர் மோடியை மிகவும் மகிழ்ச்சியுடன் அடிக்கடி நினைவுகூர்வார். இரு தலைவர்களுக்கும் இடையிலான தனிப்பட்ட நல்லுறவு மற்றும் இருதரப்பு உறவுகளில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியே இதற்கு காரணம்.

இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்தம் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், இரு நாடுகளுக்கும் பயனளிக்கும்.

தற்போது இந்தியா - அமெரிக்கா இடையிலான இருதரப்பு வர்த்தகம் ரூ.23 லட்சம் கோடியாக உள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் இதை ரூ.47 லட்சம் கோடியாக உயர்த்த பிரதமர் மோடியும் அதிபர் டிரம்பும் இலக்கு நிர்ணயித்துள்ளனர்.

இந்தியாவின் நீடித்த வளர்ச்சிக்கு பிரதமர் மோடி தலைமையிலான அரசின் செயல்பாடுகளே காரணம். இந்தியாவுடன் இணைந்து பணியாற்ற நாங்கள் விரும்புகிறோம்.

இருதரப்பு ராணுவ உறவு என்பது வெறும் விற்பனை சார்ந்தது மட்டுமல்ல; அது நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. அமெரிக்கா அனைத்து நாடுகளுக்கும் ராணுவ உபகரணங்களை விற்பதில்லை.

இந்தியாவுடன் நெருக்கமான உறவை அமெரிக்கா விரும்புவதால், எங்கள் நாட்டின் அரசு பிரதிநிதிகள் அடிக்கடி இந்தியாவுக்கு வருகை தருகின்றனர். வரும் அக்டோபரில், எங்கள் வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ மீண்டும் இந்தியா வர உள்ளார். இவ்வளவு குறுகிய காலத்தில் அவர் இருமுறை இந்தியா வருவது மிகவும் அரிதான ஒன்றாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்ந்து படிக்க