சிதம்பரத்திற்கு விஜய் வழங்கிய பதவி: புதிய சர்ச்சை
5 புரட்டாசி 2026 சனி 12:26 | பார்வைகள் : 345
தமிழக அரசின் முக்கிய வழக்குகளில், உச்ச நீதிமன்றத்தில் ஆஜராகும் வழக்கறிஞர்கள் பட்டியலில் காங்கிரஸ் மூத்த தலைவர் ப.சிதம்பரம் இடம் பெற்றுள்ளார். இந்த நியமனம் தொடர்பான தகவல் முன்கூட்டியே தெரிவிக்கப்படாததால், காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் மற்றும் லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுல் ஆகியோரிடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
சிதம்பரத்தை நியமித்து, அது தொடர்பான அரசாணை வெளியான பின்னரே, காங்கிரஸ் பொதுச்செயலாளர் வேணுகோபால் இந்த விவகாரம் குறித்து லோக்சபா எதிர்க்கட்சி தலைவர் ராகுலிடம் தெரிவித்துள்ளார்.
அதற்கு ராகுல், ‘‘இந்த நியமனம் தொடர்பாக சிதம்பரத்துக்கு முன்கூட்டியே தெரியுமா?’’ என்று கேட்டுள்ளார். இது குறித்து தனக்கு தெரியாது என வேணுகோபால் பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
பின்னர், ஒரு எம்.பி. வாயிலாக சிதம்பரத்திடம் வேணுகோபால் விசாரித்தபோது, ‘‘எனக்கே இப்போதுதான் தெரியும்’’ என்று சிதம்பரம் பதிலளித்துள்ளார்.
ஆனால், சிதம்பரத்தின் ஒப்புதல் பெற்ற பின்னரே தமிழக அரசு அவரை அந்தப் பதவியில் நியமித்தது தெரியவந்துள்ளது. இந்த தகவலை மீண்டும் ராகுலிடம் தெரிவித்தபோது, அவர் கடும் அதிருப்தி அடைந்ததாக கூறப்படுகிறது.
சிதம்பரம் ஆதரவாளர்கள் கூறியதாவது:
சிதம்பரம் போன்ற சட்ட வல்லுனரின் பங்கு, தமிழக அரசின் சட்ட விவகாரங்களில் முக்கியத்துவம் பெறுவது இயல்பானது. சிதம்பரம் மூத்த தலைவர் மட்டுமல்லாமல், மத்திய நிதி அமைச்சர், மத்திய உள்துறை அமைச்சர் உள்ளிட்ட பதவிகளையும் வகித்துள்ளார்.
அவரது அனுபவம் தமிழக அரசுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். முக்கிய பிரச்சினைகளில் சிதம்பரத்தின் சட்ட ஆலோசனைகள் தமிழக அரசுக்கு நிச்சயம் பயன் தரும். எனவே, இந்த விவகாரத்தை சர்ச்சையாக்கத் தேவையில்லை.
இவ்வாறு அவர்கள் கூறினர்.



