குறிப்பிட்ட சில நோய்களுக்கான மருத்துவ விடுப்பின் அதிகபட்ச கால அளவு குறைக்கப்பட்டுள்ளது!!

குறிப்பிட்ட சில நோய்களுக்கான மருத்துவ விடுப்பின் அதிகபட்ச கால அளவு குறைக்கப்பட்டுள்ளது!!

4 புரட்டாசி 2026 வெள்ளி 22:12 | பார்வைகள் : 1594


இரண்டு அரசாணை வரைவு ஆவணங்கள், மருத்துவ விடுப்பு தொடர்பான விதிமுறைகளை மேலும் கடுமையாக்குகின்றன. முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, நீண்டகால நோய்களுக்கான (ALD) சலுகை நிலை கொண்ட சில நோயாளிகளை அரசு தற்போது குறிவைத்துள்ளது. 

பிரதமர் Sébastien Lecornu ஏற்கனவே இதற்கான முன்னறிவிப்பை வழங்கியிருந்தார். குறிப்பிட்ட சில நோயாளிகளுக்கு, குறிப்பாக லேசான மனச்சோர்வு அல்லது தசை-எலும்பு தொடர்பான நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு, மருத்துவ விடுப்பின் அதிகபட்ச காலம் 2026 அக்டோபர் 1 முதல் மூன்று ஆண்டுகளில் இருந்து ஒரு ஆண்டாகக் குறைக்கப்படும். இவை “ALD non exonérante” எனப்படும் நீண்டகால நோய் வகையின் கீழ் உள்ள நோயாளிகளுக்கான விதிமுறைகளை மேலும் கடுமையாக்குகின்றன.

“ALD non exonérante” என்றால் என்ன?

சுகாதாரக் காப்பீட்டு நிர்வாகத்தின் இந்த தொழில்நுட்பச் சொல்லுக்குப் பின்னால், ஆறு மாதங்களுக்கு மேல் மருத்துவ விடுப்பு தேவைப்படும் என்று முன்கூட்டியே எதிர்பார்க்கப்படும் நோய்கள் உள்ளன. ஆனால், சில புற்றுநோய்கள், நீரிழிவு நோய் அல்லது இதய செயலிழப்பு போன்ற தீவிர நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைக்கும் 100%  Sécurité sociale மருத்துவச் செலவு ஈடு இவர்களுக்கு கிடைக்காது.

உதாரணமாக:

  • தொற்று ஏற்பட்டு சிக்கலான தோள்பட்டை எலும்பு முறிவு;
  • நெருங்கிய ஒருவரின் மரணத்திற்குப் பிறகு ஏற்படும் லேசான மனச்சோர்வு

போன்ற நிலைகள் “ALD non exonérante” என்ற வகைக்குள் வரலாம். இந்த நிலையில் உள்ள நோயாளிகளுக்கு, சிறப்பு 100% சுகாதாரச் செலவு ஈடு செய்யும் திட்டத்திற்குப் பதிலாக, பொதுவான விதிமுறைகளின்படி மருத்துவச் செலவுகளும் மருத்துவ விடுப்புக்கான இழப்பீடுகளும் வழங்கப்படும்.

இந்த புதிய விதிமுறை 2026 அக்டோபர் 1 முதல் வழங்கப்படும் புதிய மருத்துவ விடுப்புகளுக்கு மட்டுமல்ல. அந்த திகதியன்று ஏற்கனவே நடைபெற்று வரும் மருத்துவ விடுப்புகளில் ஆறு மாத காலத்தை எட்டியிருப்பவைகளுக்கும் இது பொருந்தும் என்று அரசாணை வரைவுகள் குறிப்பிடுகின்றன.

முறைகேடுகளைத் தடுக்கும் நடவடிக்கை

“ALD exonérante” எனப்படும் மற்றொரு வகை நீண்டகால நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, மருத்துவச் செலவுகளுக்கான சமூகப் பாதுகாப்பு ஈடு பொதுவாக 100% வரை வழங்கப்படுகிறது (மருத்துவர்களின் கூடுதல் கட்டணங்களைத் தவிர). இவர்களுக்கு மருத்துவ விடுப்புக்கான அதிகபட்ச காலமும் நீண்டதாக இருந்து, மூன்று ஆண்டுகள் வரை அனுமதிக்கப்படுகிறது.

வரவிருக்கும் இந்த புதிய கட்டுப்பாடு திடீரென எடுக்கப்பட்ட முடிவு அல்ல.

கடந்த ஏப்ரல் மாதத்தில், சுகாதார அமைச்சகம் வேலைக்கு வராமல் இருப்பதை (absentéisme) குறைக்கும் ஒரு பெரிய திட்டத்தை அறிவித்திருந்தது. அந்தத் திட்டத்திலும் ஏற்கனவே மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு தொடர்பான பிரச்சினைகள், அத்துடன் தசை-எலும்பு தொடர்பான நோய்கள் கவனத்தில் கொள்ளப்பட்டிருந்தன.

மருத்துவர் ஒருவர் மருத்துவ விடுப்பு வழங்குவதற்கு முன், கட்டாயமாக இரண்டாவது மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும் என்ற திட்டமும் பரிசீலிக்கப்பட்டு வந்தது. இந்த முன்மொழிவு, 2027 சமூகப் பாதுகாப்பு நிதி சட்ட மசோதா (PLFSS 2027) தொடர்பான விவாதங்களில் முன்வைக்கப்படலாம்.

மருத்துவ விடுப்புகளுக்கான செலவு அதிகரிப்பு

2025ஆம் ஆண்டில், வேலைக்கு செல்ல முடியாத நிலையில் இருந்த நோயாளிகளுக்கு சமூகப் பாதுகாப்பு வழங்கிய தினசரி இழப்பீடுகள் (indemnités journalières) மொத்தம் 12.1 பில்லியன் யூரோக்களை எட்டின.

இதற்கு மேலாக, வேலை தொடர்பான விபத்துகள் மற்றும் தொழில்சார் நோய்களுக்காக மேலும் 5.8 பில்லியன் யூரோக்கள் செலவிடப்பட்டன. இதன் மூலம், 2016ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது மொத்தச் செலவு 65% அதிகரித்துள்ளது. இது அரசின் முதல் கட்டுப்பாட்டு நடவடிக்கை அல்ல

2026 செப்டம்பர் 1 முதல், வழக்கமான (“classiques”) மருத்துவ விடுப்புகளின் ஆரம்ப காலம் அதிகபட்சம் ஒரு மாதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது 2026ஆம் ஆண்டுக்கான சமூகப் பாதுகாப்பு வரவுசெலவுத் திட்டத்தில் ஏற்கனவே குறிப்பிடப்பட்டிருந்தது.

மேலும், கடந்த ஆண்டு மருத்துவ விடுப்புக்கான தினசரி இழப்பீட்டின் உச்சவரம்பும் குறைக்கப்பட்டது. அது 1.8 Smic-இல் இருந்து 1.4 Smic-ஆக குறைக்கப்பட்டது. அதேபோல், 2024ஆம் ஆண்டில், தொலைமருத்துவ ஆலோசனை (téléconsultation) மூலம் வழங்கப்படும் மருத்துவ விடுப்புகளின் காலத்திற்கும் கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படிக்க