பேரிடரை சமாளிக்க 2வது தலைநகர்: தமிழக அரசுக்கு கோரிக்கை
5 புரட்டாசி 2026 சனி 13:51 | பார்வைகள் : 1635
தமிழகத்தில் பேரிடர் காலங்களில் மாற்று நிர்வாக மையமாக செயல்படும் வகையில், 2-வது நிர்வாகத் தலைநகரை உருவாக்குவது காலத்தின் அவசியம் என்று கோவை கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
கடல் மட்டத்துக்கு மிக அருகில் சென்னை அமைந்திருப்பதால், கடல் மட்ட உயர்வு, புயல், கனமழை, வெள்ளம் மற்றும் காலநிலை மாற்றம் உள்ளிட்ட இயற்கை பேரிடர்களால் அதிகம் பாதிக்கப்படும் பகுதியாக உள்ளது.
குறிப்பாக, தமிழக அரசின் முக்கிய அலுவலகங்கள், நிர்வாக கட்டமைப்புகள், ஆவணக் காப்பகங்கள், தரவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய கட்டமைப்புகளும் சென்னையிலேயே அமைந்துள்ளன.
எதிர்காலத்தில் மிகப்பெரிய அளவில் பேரிடர் ஏற்பட்டு, நிர்வாக செயல்பாடுகள் ஸ்தம்பிக்கும் சூழல் உருவானால், மாற்று நிர்வாக அமைப்பை உருவாக்குவது மிகவும் அவசியம் என்று கவுசிகா நீர் கரங்கள் அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
முதல்வர் விஜய்க்கு கோரிக்கை
இவ்வமைப்பின் நிறுவனர் செல்வராஜ், தமிழக முதல்வர் விஜய்க்கு அனுப்பியுள்ள கோரிக்கை கடிதத்தில் கூறியிருப்பதாவது:
புவியியல் மற்றும் பேரிடர் அபாயங்களை முழுமையாக ஆய்வு செய்து, தகுதியான மற்றும் பாதுகாப்பான இடத்தில் 2-வது நிர்வாகத் தலைநகரை உருவாக்க வேண்டும்.
அந்நகரில் படிப்படியாக முக்கிய அரசு அலுவலகங்கள், ஆவணக் காப்பகங்கள், அவசரகால கட்டுப்பாட்டு மையங்கள், தரவு மையங்கள் மற்றும் அத்தியாவசிய நிர்வாக கட்டமைப்புகளை ஏற்படுத்த வேண்டும்.
இயற்கை பேரிடர் அல்லது வேறு எந்த அவசர நிலையிலும், சென்னைக்கு மாற்றாக அரசின் முக்கிய நிர்வாகப் பணிகளைத் தடையின்றி மேற்கொள்ளும் வகையில் இந்த நகரை உருவாக்க வேண்டும்.
முக்கிய அரசு தரவுகள் மற்றும் ஆவணங்களுக்கு பாதுகாப்பான மாற்று காப்பு மையங்களை ஏற்படுத்த வேண்டும். மேலும், நிர்வாக தகவல்கள் ஒரே இடத்தில் குவியாத வகையிலும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நிர்வாகம், பேரிடர் மேலாண்மை, நகரமைப்பு, புவியியல், காலநிலை மாற்றம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகிய துறைகளைச் சேர்ந்த வல்லுனர்கள் அடங்கிய உயர்மட்ட குழுவை அமைத்து, விரிவான திட்ட அறிக்கையை தயாரிக்க வேண்டும்.
பேரிடர் ஏற்பட்ட பிறகு நடவடிக்கை எடுப்பது என்ற அணுகுமுறையை கடந்து, பேரிடருக்கு முன்பே தயார்நிலையில் இருப்பது என்ற தொலைநோக்கு நிர்வாக அணுகுமுறையை மேற்கொள்ள வேண்டும்.
2-வது தலைநகரை அமைப்பதற்கான ஆய்வு மற்றும் அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னுரிமை அடிப்படையில் தொடங்க வேண்டும். இது, தமிழகத்தின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு முன்வைக்கப்படும் கோரிக்கையாகும்.
இவ்வாறு அந்தக் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.



