மக்கள் நலக் கொள்கையால் இந்தியா முன்னேற்றம்: மோடி

மக்கள் நலக் கொள்கையால் இந்தியா முன்னேற்றம்: மோடி

6 புரட்டாசி 2026 ஞாயிறு 05:14 | பார்வைகள் : 228


டில்லியில் நடைபெற்ற ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி, மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி என்ற கொள்கையுடன் இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருவதாக தெரிவித்தார்.

டில்லியில் மிகவும் பிரபலமான ஸ்ரீ ராம் வணிகக் கல்லூரியின் நூற்றாண்டு விழா, ஆசிரியர் தினமான இன்று நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக பிரதமர் மோடி கலந்து கொண்டார். விழாவில் பங்கேற்பதற்காக அவர் மெட்ரோ ரயிலில் பயணம் செய்தார். அப்போது ரயிலில் பயணித்த மாணவர்கள் மற்றும் குழந்தைகளுடன் அவர் கலந்துரையாடினார்.

தொடர்ந்து, கல்லூரியின் நூற்றாண்டு விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:

மேற்கு ஆசியாவில் போர் மற்றும் பல்வேறு வர்த்தக சவால்கள் நிலவி வரும் நிலையிலும், இந்தியாவின் காலாண்டு வளர்ச்சி 7.8 சதவீதமாக உள்ளது. உலகளவில் வேகமாக வளர்ந்து வரும் பெரிய பொருளாதார நாடாக இந்தியா மாறியுள்ளதை, ஜப்பானின் கிரெடிட் ரேட்டிங் ஏஜென்சியும் உயர்த்தியுள்ளது. மக்கள் நலன் சார்ந்த நல்லாட்சி என்ற கொள்கையுடன் இந்தியா தற்போது வேகமாக முன்னேறி வருகிறது.

1925-ம் ஆண்டு முதல் மின்சார ரயில் இயக்கப்பட்டதிலிருந்து 2014-ம் ஆண்டு வரை, சுமார் 90 ஆண்டுகளில் 30 சதவீதத்திற்கும் குறைவான ரயில் பாதைகளே மின்மயமாக்கப்பட்டிருந்தன. ஆனால், கடந்த 12 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 100 சதவீத ரயில் பாதைகள் மின்மயமாக்கப்பட்டுள்ளன.

பயங்கரவாதத்தைப் பரப்புகிறவர்கள் தற்போது பின்தங்கியுள்ளனர். பாகிஸ்தான் ஏதாவது தவறு செய்தால், இந்திய ராணுவம் அவர்களின் எல்லைக்குள் நுழைந்து தாக்கும். ஜம்மு காஷ்மீர் முதல் வடகிழக்கு மாநிலங்கள் வரையிலும் தற்போது அமைதி அதிகரித்து வருகிறது. மவோயிஸ்ட்கள் முற்றிலுமாக ஒடுக்கப்பட்டுவிட்டனர்.

இந்தியாவின் கொள்கை குறித்து ஒரு காலத்தில் கவலை தெரிவித்த உலக நாடுகள், தற்போது இந்தியாவின் கொள்கை ரீதியிலான செயல்பாடுகள் குறித்து பேசுகின்றன.

இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.

தொடர்ந்து படிக்க