கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை
6 புரட்டாசி 2026 ஞாயிறு 06:39 | பார்வைகள் : 226
தமிழகத்தில் முதல்-அமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசு பொறுப்பேற்றதை தொடர்ந்து, கடந்த திமுக ஆட்சியில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தி வருகின்றனர்.
அந்த வகையில், கடந்த ஜூன் மாதம் முன்னாள் அமைச்சர் எ.வ.வேலுவின் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதைத்தொடர்ந்து, கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தொடர்புடைய இடங்களிலும் சோதனை நடைபெற்றது.
இந்த நிலையில், முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் சென்னை மற்றும் திருச்சியில் உள்ள வீடுகள் மற்றும் அவரது சகோதரர்களுக்கு சொந்தமான இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர்.
சென்னை மயிலாப்பூர் மற்றும் திருச்சி தில்லைநகர் ஆகிய பகுதிகளில் கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களுக்கு இன்று காலை 7 மணியளவில் சென்ற லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தீவிர சோதனை மேற்கொண்டனர். மேலும், திருவான்மியூர், அடையாறு, அண்ணாநகர், ராஜா அண்ணாமலைபுரம் உள்ளிட்ட பகுதிகளிலும் சோதனை நடைபெற்றது.
ராஜா அண்ணாமலைபுரத்தில் கே.என்.நேருவின் சகோதரர் ரவிச்சந்திரனுக்கு சொந்தமான தனியார் நிறுவனத்தின் தலைமை அலுவலகம் உள்ளது. அந்த அலுவலகத்திலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தினர். இதேபோல், திருச்சி, கோவை உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 30 இடங்களில் சோதனை நடைபெற்றது.
டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு
திமுக ஆட்சியில் கே.என்.நேரு நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சராக பதவி வகித்தார். அப்போது, அந்த துறை சார்பில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர்கள் ஒதுக்கப்பட்டன. இந்த டெண்டர் ஒதுக்கீட்டில் முறைகேடு நடைபெற்றதாக கண்டறியப்பட்டுள்ள நிலையில், அதன் அடிப்படையிலேயே இன்றைய சோதனை நடத்தப்பட்டதாக லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
திருச்சி தில்லைநகர் 5-வது கிராசில் உள்ள கே.என்.நேருவின் வீட்டுக்கு, லஞ்ச ஒழிப்புத்துறை டி.எஸ்.பி. மணிகண்டன் தலைமையில் 10 பேர் கொண்ட அதிகாரிகள் குழுவினர் இன்று காலை 7.30 மணிக்கு சென்றனர். காலை 7 மணிக்கு தொடங்கிய சோதனை பிற்பகல் 3 மணி வரை நடைபெற்றது.
இதனைத் தொடர்ந்து, கே.என்.நேருவுக்கு சொந்தமான இடங்களில் நடைபெற்ற சோதனையில் முக்கிய ஆவணங்களை லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்து எடுத்துச் சென்றனர்.
241 ஆவணங்கள் பறிமுதல்
இந்த நிலையில், கே.என்.நேருவுக்கு தொடர்புடைய இடங்களில் நடத்தப்பட்ட சோதனையில் 241 ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக லஞ்ச ஒழிப்புத்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை, திருச்சி, ஈரோடு உள்ளிட்ட 30 இடங்களில் நடைபெற்ற சோதனையில் 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் பல்வேறு ஒப்பந்தங்களில் முறைகேடு நடைபெற்றதாக கூறப்படும் புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
சட்டசபை கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எதிர்க்கட்சித் துணைத் தலைவராக உள்ள கே.என்.நேரு தொடர்புடைய இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியிருப்பது தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.



