நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனை

நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை கண்டறிய டி.என்.ஏ. பரிசோதனை

6 புரட்டாசி 2026 ஞாயிறு 09:49 | பார்வைகள் : 242


நேபாள வெள்ளத்தில் மாயமான தமிழர்களை அடையாளம் காண்பதற்காக தமிழக அரசு ஏற்பாடு செய்துள்ள டி.என்.ஏ. பரிசோதனைக்காக, தஞ்சாவூரில் மாயமானவர்களின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்களிடம் இருந்து ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

நேபாளத்தில் கடந்த ஆகஸ்ட் 26-ந்தேதி ஏற்பட்ட வெள்ளத்தில், ஆன்மிக சுற்றுலா சென்ற தமிழகத்தைச் சேர்ந்த 305 பேரில் சுமார் 220 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர். மீதமுள்ள 85 பேர் மாயமான நிலையில், அவர்களை மீட்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன.

இதற்கிடையே, வெள்ளத்தில் மாயமானவர்களை அடையாளம் காண்பதற்காக நேபாள அரசு டி.என்.ஏ. பரிசோதனை தரவுகளை கேட்டிருந்தது. இதையடுத்து, தமிழக அரசு சார்பில் சென்னை, மதுரை மற்றும் தஞ்சாவூரில் உள்ள தடய அறிவியல் துறைகள் மூலம் டி.என்.ஏ. பரிசோதனை மேற்கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.

இதன் ஒரு பகுதியாக, தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சட்டம் சார்ந்த மருத்துவம் மற்றும் நஞ்சியியல் துறை பிரிவு டாக்டர் தமிழ்மணி, மருத்துவக்கல்லூரி முதல்வர் மணிமேகலை மற்றும் தஞ்சாவூர் மண்டல தடய அறிவியல் துறை இணை இயக்குநர் ராஜ்மோகன் ஆகியோர் அடங்கிய குழுவினர் உதவியுடன் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.

தஞ்சாவூர், மயிலாடுதுறை, கரூர், திருச்சி மற்றும் திருவாரூர் மாவட்டங்களைச் சேர்ந்த 23 பேரின் குடும்ப உறுப்பினர்களிடம் இருந்து டி.என்.ஏ. பரிசோதனைக்காக ரத்த மாதிரிகள் பெறப்பட்டன. இந்த ரத்த மாதிரி சேகரிப்பு பணிகளை கலெக்டர் ரேவதி ஆய்வு செய்தார்.

இதுகுறித்து இணை இயக்குநர் ராஜ்மோகன் கூறுகையில், “முதற்கட்டமாக 23 பேரின் ரத்த மாதிரிகள் சேகரிக்கப்பட்டுள்ளன. மேலும் சிலர் தகவல் அறிந்து வரும்பட்சத்தில், அடுத்த 2 நாட்களும் ரத்த மாதிரிகளை சேகரிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதற்கான அறிக்கை ஒரு வாரத்தில் தமிழக அரசிடம் ஒப்படைக்கப்படும். பின்னர் நேபாளம் மற்றும் சீனா நாடுகளுக்கு ஆன்லைன் மூலம் தகவல் தெரிவிக்கப்படும்” என்றார்.

கலெக்டர் ரேவதி கூறுகையில், “தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த 16 பேரின் நிலை இதுவரை தெரியவில்லை. இருப்பினும், அவர்களது குடும்பத்தினருடன் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறேன். இங்கு மேற்கொள்ளப்படும் பரிசோதனை முடிவுகள் நேபாள அரசுக்கு அனுப்பப்படும். டி.என்.ஏ. மாதிரிகள் ஒத்துப்போனால், அடுத்தகட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்” என்றார்.

தொடர்ந்து படிக்க