மாணவர் திறமையை கண்டறியுங்கள்: மோடி
6 புரட்டாசி 2026 ஞாயிறு 13:02 | பார்வைகள் : 251
மாணவர்களின் திறமையை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும்” என தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடனான கலந்துரையாடலின்போது பிரதமர் மோடி தெரிவித்தார்.
ஆசிரியர் தினக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி இன்று (செப். 5) தனது இல்லத்தில் தேசிய ஆசிரியர் விருது பெற்ற ஆசிரியர்களுடன் கலந்துரையாடினார். அப்போது அவர் பேசியதாவது:
குழந்தைகளின் ஸ்கிரீன் டைம் போதையைக் குறைக்க வெளி விளையாட்டு மற்றும் படைப்பாற்றல் பயிற்சிகள் அவசியம். போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து குழந்தைப் பருவத்தைப் பாதுகாக்க, ஆசிரியர்கள் பாடத்திட்டங்களுக்கு அப்பாற்பட்டு மாணவர்களுக்கு வழிகாட்ட வேண்டும்.
போதைப்பழக்கம்
மாணவர்களின் திறமையை ஆசிரியர்கள் கண்டறிய வேண்டும். ஒரு குழந்தை விளையாட்டுகளில் தீவிர ஆர்வம் காட்டத் தொடங்கினால், அது போதைப் பழக்கத்தில் சிக்கியிருந்தாலும் படிப்படியாக அதிலிருந்து விடுபடக்கூடும். குழந்தைகளை ஆக்கப்பூர்வமான செயல்பாடுகளில் அதிகளவில் ஈடுபடுத்துவதுடன், அத்தகைய செயல்பாடுகளை ஊக்குவிக்கும் திட்டங்களை வடிவமைப்பதை நாம் வழக்கமாக்கிக் கொள்ள வேண்டும்.
உன்னிப்பாகக் கவனியுங்கள்
சில முக்கிய நகரங்கள் அல்லது பல்கலைக்கழகங்களில் தலைதூக்கியுள்ள போதைப்பொருள் விவகாரத்தைப் பொறுத்தவரை, பெரும்பாலும் விழிப்புணர்வு குறைவாகவே உள்ளது. சில நேரங்களில் எவ்வித விளக்கமும் இன்றி வெறும் விதிமுறைகள் மட்டுமே திணிக்கப்படுகின்றன.
போதைப்பொருள் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் மற்றும் அச்சங்கள் குறித்து ஆசிரியர்கள் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும். மேலும், இதுபோன்ற நடவடிக்கைகள் குழந்தைகளிடம் ஏதேனும் நடத்தை மாற்றங்களை ஏற்படுத்துகின்றனவா என்பதையும் உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்.
குழந்தைப் பருவம்
நான் உங்கள் அனைவரிடமும் பேசிக்கொண்டிருந்தாலும், ஒட்டுமொத்த கல்விச் சமூகத்திற்கும் ஒரு செய்தியைத் தெரிவிக்க விரும்புகிறேன். குழந்தைகளின் வாழ்க்கையோடு உண்மையாக இணைய, நாம் பாடப்புத்தகங்கள் மற்றும் பாடத்திட்டங்களுக்கு அப்பால் செல்ல வேண்டும்.
குழந்தைப் பருவத்தை நாம் மடிய விடக்கூடாது. அதை பாதுகாப்பதில் ஆசிரியர்களுக்கே மிகச் சிறந்த பங்கு உள்ளது. ஒவ்வொரு குழந்தையின் குழந்தைப் பருவமும் உயிர்ப்புடன் இருப்பதை உறுதி செய்வது ஆசிரியரின் கடமையாகும்.
இவ்வாறு பிரதமர் மோடி தெரிவித்தார்.



