எரிவாயு கசிவால் பயங்கர வெடி விபத்து -2 வயது குழந்தை உயிரிழப்பு; 7 பேர் காயம்!!
6 புரட்டாசி 2026 ஞாயிறு 06:35 | பார்வைகள் : 1623
Seine-Saint-Denis மாவட்டத்தின் Aubervilliers நகரில், எரிவாயு கசிவைத் தொடர்ந்து ஏற்பட்ட பயங்கர வெடி விபத்தில் குறைந்தது ஒரு குழந்தை உயிரிழந்ததுடன், மேலும் 7 பேர் காயமடைந்துள்ளனர். 5ஆம் திகதி சனிக்கிழமை இரவு Rue Paul-Verlaine பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இந்த வெடிப்பு இடம்பெற்றதாக Aubervilliers நகர மேயர் Sofienne Karroumi ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார்.
உயிரிழந்த குழந்தைக்கு 2 வயது என மேயர் தெரிவித்துள்ளார். “இந்த சிறு குழந்தையின் குடும்பத்தினருக்கும், அன்புக்குரியவர்களுக்கும் எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள். காயமடைந்தவர்களுக்கு அடுத்த சில மணி நேரங்களில் நல்ல நிலைக்கு திரும்புவார்கள் என நம்புகிறோம்” என அவர் தெரிவித்துள்ளார். காயமடைந்த 7 பேரில் இருவர் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் தீயணைப்புப் படையினர், தேசிய காவல்துறையினர் மற்றும் நகராட்சி காவல்துறையினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு தங்குமிட வசதி ஏற்படுத்தும் வகையில், நகராட்சி நிர்வாகம் ஒரு மண்டபம், தற்காலிக படுக்கைகள் மற்றும் ஒரு விளையாட்டு மைதானத்தின் உடைமாற்று அறைகளை ஏற்பாடு செய்துள்ளது. Fort d’Aubervilliers பகுதி மக்கள் அடுத்த சில மணி நேரங்களிலும் நாட்களிலும் சில இடையூறுகளை எதிர்கொள்ள நேரிடும் என நகர நிர்வாகம் தெரிவித்துள்ளது.



