அமைச்சர்கள் செயல்பாடுகள்: பிரதமர் மோடி ஆய்வு

அமைச்சர்கள் செயல்பாடுகள்: பிரதமர் மோடி ஆய்வு

7 புரட்டாசி 2026 திங்கள் 07:51 | பார்வைகள் : 235


பிரதமர் மோடி தலைமையில், மத்திய அரசின் சமூக நலன் மற்றும் சமூக நீதித் திட்டங்களின் செயல்பாடுகள் குறித்த உயர்மட்ட மறுஆய்வுக் கூட்டம் நாளை (செப்டம்பர் 7) திங்கட்கிழமை நடைபெற உள்ளது.

துறைவாரியான முன்னேற்றம், அமைச்சர்களின் செயல்திறன் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யும் இந்தக் கூட்டத்திற்கு பிரதமர் மோடி நாளை மாலை தலைமை தாங்க உள்ளார். மத்திய அமைச்சரவை விரைவில் மாற்றி அமைக்கப்படலாம் என்ற பேச்சுகள் எழுந்துள்ள நிலையில், இந்த முக்கியத்துவம் வாய்ந்த கூட்டம் நடைபெறுகிறது.

டெல்லியில் நடைபெறும் இக்கூட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட மத்திய அமைச்சர்கள், இணை அமைச்சர்கள் மற்றும் தனிப்பொறுப்புடன் கூடிய இணை அமைச்சர்கள் தங்களது அமைச்சகங்களின் செயல்திறன் அறிக்கைகளுடன் பங்கேற்க உள்ளனர்.

குறிப்பாக, கல்வி, விவசாயம், சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் ஆகிய அமைச்சகங்களின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சித் திட்டங்கள் குறித்து விரிவாக ஆய்வு செய்யப்படவுள்ளது.

அரசு அறிவித்துள்ள மக்கள் நலத்திட்டங்களின் தற்போதைய நிலவரம், நிர்ணயிக்கப்பட்ட இலக்குகள் எட்டப்பட்டுள்ளனவா என்பது குறித்தும், அமைச்சர்களின் தனிப்பட்ட செயல்திறன் குறித்தும் பிரதமர் மோடி நேரடியாக மதிப்பாய்வு செய்ய உள்ளார்.

அரசின் திட்டங்கள் மக்களைச் சென்றடைவதை உறுதி செய்வதுடன், அமைச்சகங்களின் பொறுப்புணர்வை அதிகரிக்கும் நோக்கிலும் இந்த செயல்திறன் ஆய்வு நடத்தப்படுகிறது.

நலத்திட்டங்களை அறிவிப்பது மட்டுமே இனி போதுமானதல்ல. அவற்றின் செயல்திறன், செயலாக்கம் மற்றும் மக்களிடையே ஏற்படுத்தியுள்ள தாக்கம் ஆகியவற்றையும் மதிப்பாய்வு செய்யும் வகையில் இந்தக் கூட்டம் நடைபெறுகிறது.
 

தொடர்ந்து படிக்க