போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் உறுதி; அமித்ஷா
7 புரட்டாசி 2026 திங்கள் 08:27 | பார்வைகள் : 243
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் மத்திய அரசு உறுதியுடன் செயல்பட்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.
கோவாவில் நிருபர்களிடம் அமித்ஷா கூறியதாவது:-
போதைப்பொருள் இல்லாத இளைஞர் சக்தியுடன் 2047-ம் ஆண்டில் வளர்ச்சியடைந்த இந்தியா என்ற இலக்கை அடைவதே பிரதமர் மோடியின் நோக்கமாகும். மோடி பிரதமராகப் பொறுப்பேற்றது முதல், நாட்டின் உள்நாட்டுப் பாதுகாப்பை வலுப்படுத்த மத்திய உள்துறை அமைச்சகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
பிரதமர் மோடி பதவியேற்றபோது, நாடு மூன்று முக்கிய சவால்களை எதிர்கொண்டிருந்தது. ஜம்மு-காஷ்மீரில் அதிகரித்து வந்த பயங்கரவாத அச்சுறுத்தல், நக்சலிசம் மற்றும் வடகிழக்கு பிராந்தியத்தில் அமைதியின்மையை ஏற்படுத்திய பல்வேறு ஆயுதமேந்திய குழுக்கள் ஆகியவை அவற்றில் அடங்கும்.
இதுதவிர, உள்நாட்டுப் பாதுகாப்புச் சவால்களின் ஒரு பகுதியாக, பல்வேறு குண்டுவெடிப்புகளாலும் நாடு பாதிக்கப்பட்டிருந்தது.
2019-ம் ஆண்டுக்குப் பிந்தைய காலகட்டத்தைப் பார்க்கும்போது, பிரதமர் மோடியின் தலைமையின் கீழ் 370-வது பிரிவு ரத்து செய்யப்பட்ட பிறகு, ஜம்மு-காஷ்மீரில் பிரிவினைவாத உணர்வுகள் கணிசமாகக் குறைந்துள்ளன.
பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அரசின் கீழ் ஜம்மு-காஷ்மீர் முன்னேற்றப் பாதையில் சென்று கொண்டிருக்கிறது. பயங்கரவாதச் சம்பவங்களின் எண்ணிக்கையும் படிப்படியாகக் குறைந்து வருகிறது.
50 ஆண்டுகளாக நீடித்து வந்த நக்சலிசப் பிரச்சினை தற்போது கடந்த கால விஷயமாக மாறியுள்ளது. நக்சலைட்டுகள் தற்போது ஆயுதங்களைக் கீழே போட்டுவிட்டு, சரணடைந்து, நாட்டின் வளர்ச்சிப் பயணத்தில் இணைய முன்வந்துள்ளனர்.
போதைப்பொருள் இல்லாத இந்தியாவை உருவாக்குவதில் நாங்கள் உறுதியுடன் உள்ளோம்.
இவ்வாறு அமித்ஷா கூறினார்.



