ஊழல் செய்த யாரும் தப்பிக்க முடியாது; அமைச்சர் நிர்மல்குமார் பேட்டி
7 புரட்டாசி 2026 திங்கள் 09:33 | பார்வைகள் : 204
ஊழல் செய்தவர்கள் யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது என்றும், யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் இல்லை என்றும் அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார்.
**அவரது பேட்டி:**
யார் மீதும் எந்தவிதமான பழிவாங்கும் நடவடிக்கையும் எடுக்க முடியாது. சும்மா பொய்யான வழக்குகளை எல்லாம் பதிவு செய்ய முடியாது. ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே வழக்குகள் பதிவு செய்யப்படும்.
கடந்த முறை முன்னாள் அமைச்சர் நேருவுக்கு, பணம் வாங்கிக்கொண்டு அரசு பணிக்கு ஆட்களைச் சேர்த்ததாகக் கூறி அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியிருந்தது. அந்த நோட்டீஸ் ஆதாரங்களுடன் அனுப்பப்பட்டிருந்தது.
நிறைய ஊழல்கள் மற்றும் முறைகேடுகள் கூட்டு சதி என இரண்டு முறை நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை ஆதாரங்களை சமர்ப்பித்துள்ளது. அதன் அடிப்படையில்தான் லஞ்ச ஒழிப்புத்துறை அந்த வழக்கை பதிவு செய்திருப்பதாக நினைக்கிறேன்.
எது சம்பந்தமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது தெரியவில்லை. இதுகுறித்து லஞ்ச ஒழிப்புத்துறைதான் விளக்கம் அளிக்க வேண்டும். சம்மன் அனுப்பி விசாரணை நடத்துவார்கள்.
ஊழல் செய்தாலோ, தவறு செய்தாலோ யாராக இருந்தாலும் தப்பிக்க முடியாது. ஆதாரங்கள் இருக்கும்போது எப்படி தப்பிக்க முடியும்? எனவே, யார் மீதும் பொய் வழக்கு போட வேண்டிய அவசியம் இல்லை. எந்தெந்த ஆதாரங்கள் உள்ளனவோ, அவற்றின் அடிப்படையில் சட்டபூர்வமாக நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்வாரியத்தில் 45 டெண்டர்களில் முறைகேடுகள் இருப்பதாக கூறப்படுகிறது. அவை எந்த காலகட்டத்தில் நடைபெற்றன என்பதை தெரிவிக்க வேண்டும். அவ்வாறு இல்லாமல் நீதிமன்றத்தில் அதை நிரூபிக்க முடியுமா?
சரியான முறைகேடுகள் நடைபெற்று, மக்களின் பணம் தவறாக பயன்படுத்தப்பட்டிருக்கும் பட்சத்தில், அதுதொடர்பாக வழக்குகள் பதிவு செய்யப்படும்.
இவ்வாறு அமைச்சர் நிர்மல்குமார் கூறினார்.



