இறையாண்மையில் சமரசம் இல்லை: மத்திய அரசு
7 புரட்டாசி 2026 திங்கள் 10:36 | பார்வைகள் : 235
இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான மத்திய அரசின் நிலைப்பாடு தெளிவானது என்றும், அதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை என்றும் மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
ஆப்பிரிக்க கண்டத்தின் உண்மையான பரப்பளவை பிரதிபலிக்கும் வகையில், அதனை பெரிதாகக் காட்டும் புதிய உலக வரைபடத்தை பயன்படுத்த வேண்டும் என்ற தீர்மானத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்டது. இந்தத் தீர்மானத்திற்கு 164 நாடுகள் ஆதரவு தெரிவித்த நிலையில், அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்தது.
இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெயஸ்வால் கூறியதாவது:-
புதிய உலக வரைபடத்தை பயன்படுத்த வேண்டும் என்ற ஐ.நா. தீர்மானத்தை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. இந்தத் தீர்மானம் எந்தவொரு குறிப்பிட்ட உலக வரைபடத்தையும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது அங்கீகரிக்கவோ இல்லை. மேலும், சர்வதேச எல்லைகள், சர்ச்சைக்குரிய பகுதிகள் அல்லது இடப்பெயர்கள் உள்ளிட்ட அரசியல் வரைபடவியலையும் இது குறிப்பிடவில்லை.
ஜம்மு-காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் உள்ளிட்ட இந்தியாவின் இறையாண்மைக்கு உட்பட்ட பகுதிகள், இந்தியாவின் அதிகாரப்பூர்வ வரைபடத்தின்படியே சித்தரிக்கப்பட வேண்டும்.
இந்தியாவின் பகுதிகளை தவறாகவோ அல்லது திசைதிருப்பும் வகையிலோ சித்தரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இந்தியாவின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு தொடர்பான எங்களது நிலைப்பாடு தெளிவானது. இதில் எந்தவித சமரசத்துக்கும் இடமில்லை.
இவ்வாறு ரந்தீர் ஜெயஸ்வால் தெரிவித்துள்ளார்.



