டெல்லி கட்டட விபத்து: மீட்பு பணிகளை கேட்டறிந்த அமித் ஷா

டெல்லி கட்டட விபத்து: மீட்பு பணிகளை கேட்டறிந்த அமித் ஷா

7 புரட்டாசி 2026 திங்கள் 02:40 | பார்வைகள் : 268


டெல்லியில் 6 மாடி கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் தொடர்ந்து நடைபெற்று வரும் மீட்பு பணிகள் குறித்து, டெல்லி முதல்வர் மற்றும் மீட்புக் குழுவினரிடம் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.

தெற்கு டெல்லியில் உள்ள சத்ய நிகேதன் பகுதியில் 6 மாடிக் கட்டடம் இடிந்து விழுந்ததில் 4 பேர் உயிரிழந்துள்ளனர். இதுவரை 9 பேர் மீட்கப்பட்டுள்ளனர். உயிருக்கு ஆபத்தான நிலையில் 2 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும், 50 பேர் இடிபாடுகளில் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுவதால், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

இதனிடையே, மீட்புப் பணிகளை முதல்வர் ரேகா குப்தா நேரில் சென்று ஆய்வு செய்தார். மாணவர்களின் நிலை மற்றும் மீட்புப் பணிகள் குறித்து முதல்வர் ரேகா குப்தா, டெல்லி போலீஸ் கமிஷனர் மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழுவின் நிர்வாக இயக்குநர் ஆகியோரிடம் உள்துறை அமைச்சர் அமித் ஷா கேட்டறிந்தார்.

இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியளிக்கிறது. உள்ளூர் நிர்வாகமும், தேசிய பேரிடர் மீட்புக் குழுவினரும் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். காயமடைந்தவர்களுக்குத் தேவையான அனைத்து மருத்துவ உதவிகளும் வழங்கப்பட்டு வருகின்றன” என்று குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளையில், கட்டடம் இடிந்து விழுந்த பகுதியில் தெற்கு, மேற்கு டெல்லி பாஜக எம்.எல்.ஏ. அனில் சர்மா நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அவர் கூறியதாவது:-

“இது மிகவும் துயரமான சம்பவம். பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த மாணவர்கள் இங்கு தங்கி கல்வி பயின்று வருகின்றனர். ஒட்டுமொத்த கட்டடமும் சரிந்து விழுந்துள்ளது. சரியாக எத்தனை மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியுள்ளனர் என்பது குறித்து தெரியவில்லை.

சில மாணவர்கள் இடிபாடுகளில் சிக்கியிருந்தபோது தொலைபேசியில் தொடர்புகொண்டு உதவி கேட்டுள்ளனர். அவர்களுக்காக இறைவனை வேண்டிக்கொள்கிறோம். மீட்புப் பணிகளுக்காக முதல்வர் ஒரு குழுவை அனுப்பி வைத்துள்ளார். மாணவர்களை மீட்பதில் அரசின் ஒட்டுமொத்த கவனமும் உள்ளது.”

இவ்வாறு அவர் கூறினார்.

**பிரதமர் இரங்கல்**

பிரதமர் மோடி வெளியிட்டுள்ள இரங்கல் பதிவில் கூறியிருப்பதாவது:-

“டெல்லி சத்யா நிகேதன் பகுதியில் கட்டடம் இடிந்து விழுந்த சம்பவம் மிகுந்த வேதனையை அளிக்கிறது. உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையப் பிரார்த்திக்கிறேன்.

சம்பவ இடத்தில் அதிகாரிகள் பாதிக்கப்பட்டோருக்கு தேவையான உதவிகளை செய்து வருகின்றனர்.”

இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
 

தொடர்ந்து படிக்க