செந்தில் பாலாஜி மீது சொந்த கட்சியினர் புகார்
7 புரட்டாசி 2026 திங்கள் 12:48 | பார்வைகள் : 274
கட்சி மறுசீரமைப்பு பணிகளில், தலைமையின் உத்தரவை மீறி முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி செயல்படுவதாக கோவை தி.மு.க.வினர் புகார் தெரிவித்துள்ளனர்.
சட்டசபை தேர்தல் தோல்வியைத் தொடர்ந்து, தி.மு.க.வில் கிளை முதல் மாவட்டம் வரையிலான கட்சி அமைப்புகளில் மாற்றம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
இதன் ஒரு பகுதியாக, கோவை தி.மு.க. மூன்று மாவட்டங்களில் இருந்து ஐந்து மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. மேலும், கள ஆய்வு மேற்கொண்டு, அமைப்பு சீரமைப்புக்கான பரிந்துரைகளை வழங்க மாவட்ட வாரியாக பார்வையாளர்களை கட்சி தலைமை நியமித்துள்ளது.
கோவை மாவட்டத்தில், சேலம் முன்னாள் மேயர் ரேகா பிரியதர்ஷினி மற்றும் முன்னாள் எம்.பி. பார்த்திபன் ஆகியோர் பார்வையாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். இருவரும் கோவையில் கள ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், கோவை மாவட்ட தி.மு.க. செயற்குழு கூட்டம் நேற்று நடைபெற்றது. இந்தக் கூட்டத்தை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வும், முன்னாள் அமைச்சருமான செந்தில் பாலாஜி புறக்கணித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
**தி.மு.க.வினர் கூறியதாவது:**
“தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, தொகுதி பக்கமே செந்தில் பாலாஜி வரவில்லை. கோவை மாவட்டம் தனது கட்டுப்பாட்டில் இருக்க வேண்டும் என அவர் நினைக்கிறார். மாவட்டச் செயலர்களை அழைத்து, தனக்கு ஏற்ற வகையில் கிளை, ஒன்றியம், நகரம் ஆகியவற்றை பிரிக்குமாறு கூறுகிறார்.
இதற்காகத்தான் கட்சி தலைமை இருவரை பார்வையாளர்களாக நியமித்துள்ளது. அவர்கள் தலைமைக்கு பரிந்துரை வழங்குவதற்கு முன்பே, அவசரமாக கட்சி அமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த செந்தில் பாலாஜி நினைக்கிறார்.
கோவையைப் பொறுத்தவரை, ‘யார் பொறுப்பாளராக வந்தாலும், நான் சொல்வதைதான் தலைமை கேட்கும்’ என்ற மனநிலையில் செந்தில் பாலாஜி இருக்கிறார். எனவே, மூத்த நிர்வாகிகள் ஒன்றிணைந்து இதுகுறித்து கட்சி தலைமையிடம் புகார் அளிப்போம்.”
இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.
இதனிடையே, செயற்குழு கூட்டத்தில் பேசிய ரேகா பிரியதர்ஷினி, “பார்வையாளராக வந்திருப்பவர்கள், சொல்லும் இடத்தில் கையெழுத்துப் போட்டு சென்றுவிடுவார்கள் என சிலர் பேசி வருவதாக அறிந்தோம். நாங்கள் அதற்காக வரவில்லை. கட்சியினரிடம் பேசி, ஆய்வு செய்து, கட்சிக்கு எது நல்லதோ அதை மட்டுமே பரிந்துரைப்போம்” என்றார்.



