ஹிந்துக்கள் மீதான வன்முறை: பா.ஜ.க. எச்சரிக்கை
7 புரட்டாசி 2026 திங்கள் 13:52 | பார்வைகள் : 256
சிறுபான்மை மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், ஹிந்துக்களின் பாதுகாப்பையும் முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும் என பா.ஜ.க. தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியுள்ளார்.
அவரது அறிக்கை:
செங்கல்பட்டு மாவட்டம், மதுராந்தகம் அருகே பல கோடி ரூபாய் மதிப்புள்ள மரகத முருகர் சிலை காணாமல் போனது. அந்த பதற்றம் தணிவதற்குள், சென்னை அருகே சிறுவாபுரியில் இருந்து முருகனின் அறுபடை வீடுகளுக்கும் கொண்டு செல்லப்பட இருந்த 108 வெற்றி வேல்கள் அடங்கிய வாகனம் எரிக்கப்பட்டுள்ளது.
ஆன்மிக அரசியல் கட்சி சார்பில் எடுத்துச் செல்லப்பட்ட வெற்றி வேல்களை, மீஞ்சூர் நெய்தவாயல் அருகே சமூக விரோதிகள் எரித்துள்ளனர். வெற்றி வேல்கள் தீயில் கருகியதைப் பார்க்கும்போது நெஞ்சம் கனத்துப் போகிறது.
சட்டசபையை ‘சர்ச்’ ஆக மாற்றிய விஜய் தலைமையிலான அரசு, திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்றுவதற்கு வலுவாகத் தடை விதித்தால், மத நல்லிணக்கம் எப்படி மலரும்? ஹிந்துக்களின் நம்பிக்கைகளை மதிக்கும் சமத்துவ உணர்வே அரசுக்கு இல்லாதபோது, சமூக விரோதிகளுக்கு எப்படி பயம் இருக்கும்?
ஹிந்துக்கள் மீது தொடர்ந்து நடைபெறும் இதுபோன்ற அடக்குமுறைகளும், வன்முறைகளும் ஆபத்தானவை. வெற்றி வேல்களை எரித்தவர்களை கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மதச்சார்பின்மை என்ற போர்வையில் சிறுபான்மை மக்களுக்காக மட்டுமே செயல்படாமல், ஹிந்துக்களின் மத அடையாளங்களும் பாதுகாக்கப்படுவதை முதல்வர் விஜய் உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



