கே.என்.நேருவிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைவில் விசாரணை
7 புரட்டாசி 2026 திங்கள் 14:01 | பார்வைகள் : 238
தமிழக அரசின் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் ரூ.1,020 கோடி மதிப்பிலான டெண்டர் முறைகேடு தொடர்பாக, முன்னாள் அமைச்சர் கே.என்.நேருவின் வீடு மற்றும் அவருக்கு தொடர்புடைய 30 இடங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையின்போது, டெண்டர்களில் நடைபெற்றதாக கூறப்படும் முறைகேடுகள் தொடர்பான 241 ஆவணங்கள் மற்றும் மின்னணு சாட்சியங்கள் கைப்பற்றப்பட்டதாக லஞ்ச ஒழிப்பு போலீசார் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கின் புலனாய்வு தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினர்.
இதையடுத்து, சோதனையில் கைப்பற்றப்பட்ட ஆவணங்களை லஞ்ச ஒழிப்பு போலீசார் தீவிரமாக ஆய்வு செய்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த ஆவணங்களின் அடிப்படையில், கே.என்.நேரு, அவரது சகோதரர் உள்ளிட்டோருக்கு சம்மன் அனுப்பி விரைவில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக லஞ்ச ஒழிப்பு போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இதற்கிடையே, தன் மீதான டெண்டர் முறைகேடு குற்றச்சாட்டுகளை கே.என்.நேரு திட்டவட்டமாக மறுத்துள்ளார்.



