முட்டை பிரியாணி
7 புரட்டாசி 2026 திங்கள் 06:43 | பார்வைகள் : 347
திண்டுக்கல் பிரியாணி என்றாலே நம் நினைவுக்கு வருவது அதன் தனித்துவமான கமகமக்கும் மணமும், காரசாரமான சுவையும்தான். இதில் திக்கான தேங்காய்ப்பால் மற்றும் தயிர் சேர்ந்து சமைக்கும் போது பிரியாணி மிகவும் மென்மையாகவும், அற்புதமான மணத்துடனும் இருக்கும். தேங்காய்ப்பால் சேர்க்கும் போது காரம் மிதமாகி, சுவை இன்னும் கூடும்.இந்த சுவையான பிரியாணியை வீட்டிலேயே ஹோட்டல் சுவையில் திண்டுக்கல் ஸ்டைல் முட்டை பிரியாணி செய்யலாம்.
சீரக சம்பா அரிசி – 2 கப் (400 கிராம்), அவித்த முட்டை – 4–5, சின்ன வெங்காயம் – 15, இஞ்சி பூண்டு விழுது – 2 டேபிள் ஸ்பூன், கெட்டித் தயிர் – 1/4 கப், பச்சை மிளகாய் – 5, புதினா – ஒரு கைப்பிடி, கொத்தமல்லி – ஒரு கைப்பிடி, நெய் – 2 டேபிள் ஸ்பூன், எண்ணெய் – 2 டேபிள் ஸ்பூன், உப்பு – தேவையான அளவு, தேங்காய்ப்பால் – 1 கப், திண்டுக்கல் பிரியாணி மசாலா – தேவையான அளவு, ரெட் சில்லி பவுடர் – தேவையான அளவு.
செய்முறை: முதலில் ஒரு மிக்ஸி ஜாரில் எடுத்து வைத்திருந்த சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், புதினா இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
குக்கர் அல்லது பிரியாணி பாத்திரத்தில் , எண்ணெய் ஊற்றி சூடானதும்,நெய் ஊற்றி, அரைத்து வைத்திருந்த மசாலாவை சேர்த்து வதக்கவும். மசாலா எண்ணெயுடன் நன்றாக பிரிந்து வரும் நேரத்தில், எடுத்து வைத்திருந்த தயிர், சேர்த்து நன்றாக வதக்க வேண்டும்.
அதன் பிறகு அதில் திண்டுக்கல் பிரியாணி மசாலா, சிகப்பு சில்லி பவுடர், தேவையான அளவு உப்பு, கொத்தமல்லி புதினாவை சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். மசாலா நன்றாக எண்ணெய் விட்டு பிரியும் நேரத்தில், வேக வைத்திருந்த முட்டை சேர்த்து நன்றாக கிளற வேண்டும். முட்டையில் நன்றாக மசாலா சேரும் வரை கிளற வேண்டும்.
அதன் பிறகு 1 கப் தேங்காய்ப்பால் + 2 கப் தண்ணீர் (மொத்தம் 3 கப் திரவம்) ஊற்றி, தேவையான அளவு உப்பு சேர்த்து கொதிக்க விடவும். நன்றாக கொதி வந்த பிறகு எடுத்து வைத்திருந்த சீரக சம்பா அரிசி சேர்த்து ஒரு கிளறி மூடி போட வேண்டும்.
அரிசியும் தண்ணீரும் சம அளவுக்கு வற்றி வரும் வரை (70% வெந்ததும்) மிதமான தீயில் வேகவிடவும், அதன்பிறகு மிதமான தீயில் (Low Flame) 12-15 நிமிடங்கள் 'தம்'மில் வைக்கவும். தம் முடிந்ததும் அடுப்பை அணைத்து 10 நிமிடங்கள் திறக்காமல் வைக்கவும். பிறகு மெதுவாகக் கிளறிவிட்டால், தேங்காய்ப்பால் மணத்துடன் உதிரியான திண்டுக்கல் சீரக சம்பா முட்டை பிரியாணி தயார்!



