திமுக செய்த ஊழல்கள்.! ஆதாரத்துடன் ஆவேசமாக பேசிய முதல்-அமைச்சர் விஜய்.
7 புரட்டாசி 2026 திங்கள் 14:11 | பார்வைகள் : 372
குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே இந்த அரசின் நிலைப்பாடு என முதல்வர் விஜய் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டசபை, மூன்று நாட்கள் அரசு விடுமுறைக்குப் பிறகு இன்று கூடியது. இதில் முதல்வர் விஜய் அளித்த பதிலுரை:
சாலைகள் மற்றும் ஆலைகள் அமைப்பதால் மட்டும் மாநிலத்தின் வளர்ச்சி தீர்மானிக்கப்படுவதில்லை. சட்டம்-ஒழுங்கு சிறப்பாக இருந்தால்தான் தொழில் முதலீடுகள் வரும்; தொழில்களும் முறையாக நடைபெறும். சட்டத்தை மதித்து நடப்பவர்களுக்கு காவல்துறை உற்ற நண்பனாக இருக்க வேண்டும்.
**அரசின் நிலைப்பாடு**
முதல்வர், அமைச்சர், அதிகாரிகள் என யாராக இருந்தாலும் காவல்துறையின் சட்டப்பூர்வ நடவடிக்கைகளில் தலையீடு இருக்கக் கூடாது என வலியுறுத்தியுள்ளேன். குற்றவாளிகள் யாராக இருந்தாலும், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் நடவடிக்கை எடுக்க வேண்டும். சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே இந்த அரசின் நிலைப்பாடு.
**இதுதான் அரசியலா?**
சில தினங்களுக்கு முன்பு உறுப்பினர் ஒருவர் பேசும்போது, ஏதோ எலும்பு டாக்டர் போல சட்டசபைக்குள் எலும்பை உடைப்பதாக பேசினார். இதுபோன்ற பேச்சுகள் எதற்காக? இதுதான் அரசியலா? இப்படி எல்லாம் பேசி, பேசி மக்கள் அதை பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
நான் அவர்களுக்கு அறிவுரை கூற வரவில்லை. இதுதான் யதார்த்தம். மற்றொரு திமுக மூத்த உறுப்பினர் பேசும்போது, மக்கள் தங்கள் கட்சிகளுக்கு வாக்களிக்காத காரணத்தால், மக்களுக்கு நல்ல சாவே வராது எனக் கூறியுள்ளார். இது எனக்கு சத்தியமாக புரியவில்லை. கடந்த 50 ஆண்டுகளாக இதே மக்கள்தான் அவர்களுக்கு வாக்களித்து வந்தார்கள்.
**மக்கள் தீர்ப்பு**
மக்களைப் பார்த்து இப்படிப்பட்ட வார்த்தைகள் எப்படி அவர்களின் வாயிலிருந்து வருகின்றன என்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை. மக்கள் தீர்ப்பை ஏற்றுக்கொள்ளும் மனநிலை இல்லாதபோது, இவர்கள் ஏன் அரசியலில் இருக்க வேண்டும் என்ற கேள்வி எழுகிறது. மக்கள் தீர்ப்பை மதிக்க வேண்டும்.
ஆபாச நதி, வன்ம நதி போன்ற பேச்சுகளை பல ஆண்டுகளாக அரசியலில் இருக்கும் பெரியவர்கள், அந்தக் காலத்தில் பேசாத பேச்சா எனக் கூறி நியாயப்படுத்துகின்றனர். அந்தக் கால அரசியலில் இருந்த நல்லவற்றை மட்டும் எடுத்துக்கொள்வோம். அவதூறான, அசிங்கமான, துருப்பிடித்த அரசியல் நமக்கு எதற்கு?
நமது நண்பர்கள் எதைப் பேசினாலும், நாங்கள் மிசாவை பார்த்தவர்கள் என்று கூறுகின்றனர். அனைவருக்கும் மிசா பற்றிய வரலாறு தெரியும். நடந்தது, நடந்து கொண்டிருப்பது, நடக்கப் போவது என அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
**இது தான் திமுக!**
திமுகவினர் குறித்து கண்ணதாசன் மிகச் சுருக்கமாக கூறியுள்ளார். “பேசி பழகிய பொய், வாங்கி பழகிய கை, போட்டு பழகிய பை” என்பதுதான் திமுக.
நமது அரசு யாருக்கும் தனிப்பட்ட அடையாளமாக இருக்காது. நமது அரசின் அடையாளம் தமிழ், தமிழர், தமிழ்நாடு அவ்வளவுதான். தமிழகம் தான் என் வீடு; 8 கோடி மக்கள் தான் என் சொந்தம். அவர்களின் அடையாளமாகவே நமது அரசு எப்போதும் இருக்கும்.
**எம்ஜிஆர் பாடல்!**
“மக்கள் நலன், மக்கள் நலன் என்றே சொல்வார்; தன் மக்கள் நலன் ஒன்றே கருத்தில் கொள்வார்” என எம்ஜிஆர் ஒரு பாடலை பாடியுள்ளார். அதை மாற்றிக் கொஞ்சம் சொல்கிறேன். மக்கள் நலன், மக்கள் நலன் என்றே சொல்வோம். தமிழக மக்கள் நலன் ஒன்றையே கருத்தில் கொள்வோம்.
இப்படித்தான் நாம் இருக்கும்போது, அதனால்தான் நாங்கள் சொன்னோம். மக்கள் பணத்தில் இருந்து ஒரு பைசாவைக்கூட தொடமாட்டோம்; தொட்டவர்களையும் விடமாட்டோம்.
**குற்றப்பட்டியல்**
கடந்த வாரம் பேசும்போது, என் மேசையில் 3 துறை கோப்புகள் இருப்பதாகவும், அவற்றை எப்போது திறக்க வேண்டுமோ அப்போது திறப்பதாகவும் கூறினேன். உடனே எதிர்க்கட்சியினர் சவால் விடுத்தனர். எனவே, அவற்றை திறப்பதற்கு முன் தற்போது ஒரு சிறிய மாதிரியைப் பார்ப்போம் எனக் கூறி, திமுக ஆட்சி மீது முதல்வர் விஜய் முன்வைத்த குற்றச்சாட்டுகள் வருமாறு:
* 1970-களில் திமுக ஆட்சியில் வீராணம் திட்டத்திற்கான சத்யநாராயண பிரதர்ஸ் டெண்டருக்கு 2.5 சதவீதம் கமிஷன் தருமாறு கருணாநிதியின் மருமகன் கமிஷன் கேட்டுள்ளார்.
* திமுக ஆட்சியில் இருந்தபோது கட்சி நிதி என்ற பெயரில் பணம் வாங்கியுள்ளனர். ஸ்டாலின், உதயநிதி மூலம் பணம் பெற்றதாக அமலாக்கத்துறை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
* அரசு ஒப்பந்தங்களுக்கு 7.5 சதவீதம் முதல் 10 சதவீதம் வரை கமிஷனாக லஞ்சம் பெற்றுள்ளனர்; பார் உரிமையாளர்களிடமிருந்தும் லஞ்சம் பெற்றுள்ளனர்.
* தப்பில் இருந்து மாட்டிக்கொள்ளாமல் தப்பு செய்பவர்கள் திமுக. திமுக இருக்கும் இடத்தில் தப்பே நடக்கும்; தப்பு நடக்கும் இடத்தில் திமுக இருக்கும்.
* செய்யும் தவறையே முறையாக செய்யும் வகையில் விஞ்ஞான ஊழலில் ஈடுபட்டுள்ளனர். மதுபாட்டிலுக்கு ரூ.10 முதல் ரூ.100 வரை கூடுதலாக ஊழல் வசூலித்ததை முறையாக செய்துள்ளனர்.
* “கரூர் கேங்க்” என்று என்னவொரு சூப்பர் பெயர் பாருங்கள். கரூர் கேங்க் தலைவர் யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் ஆவலாக உள்ளனர்.
* குற்றச்சாட்டுக்கு உள்ளான அதிகாரி ரத்தீஷ் துபாயில் ஒளிந்து கொண்டிருப்பது ஏன்?
* திமுக ஆட்சியில் திமுகவினர் தொடர்புடைய குற்றங்களில் எப்.ஐ.ஆர். பதிவு செய்வதில்கூட தாமதம் செய்யப்பட்டது.
* பெண் காவலரிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்கவில்லை.
* பெண் காவல் ஆய்வாளரை தாக்கிய திமுக பிரமுகர் மற்றும் அவரது மனைவி மீது நடவடிக்கை இல்லை.
* கடலூர் திமுக எம்.பி. ரமேஷின் ஆலையில் ஒருவர் கொல்லப்பட்ட சம்பவத்திலும் கடுமையான கண்டனம் எழுந்த பிறகே நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இவ்வாறு முதல்வர் விஜய் பேசினார்.
**ஆபாச நதி!**
சட்டசபையில் முதல்வர் விஜய் விடுத்த வேண்டுகோள்:
* கருத்துரிமை மற்றும் பேச்சுரிமையை எந்த அளவுக்கு சரியான முறையில் பயன்படுத்துகிறார்கள் என்பதை அனைவரும் சிந்திக்க வேண்டும். அரசியல் ரீதியாக என்ன வேண்டுமானாலும் கடுமையான விமர்சனங்களை செய்து கொள்ளலாம். அதனை மக்கள் நேரலையில் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். யாருடைய கருத்தை எடுத்துக்கொள்ள வேண்டும், எதை விட்டுவிட வேண்டும் என்பதை மக்கள் பார்த்துக் கொள்வார்கள்.
அரசியலுக்காக தனிப்பட்ட முறையில் பெண்கள், மக்கள் மற்றும் யாரையும் தரம் தாழ்த்திப் பேசக் கூடாது. சமீப காலமாக தமிழகத்தில் ஆபாச நதியாகவும், வன்ம நதியாகவும் பேச்சுகள் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்த நதிகள் அனைத்தையும் மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள்.
**அசிங்கமாக பேசினால்...**
பெண்களைப் பற்றி அவதூறாகவும், அசிங்கமாகவும், டபுள், டிரிபிள் மீனிங்கிலும் பேசுவதை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். நமது வீட்டில் தாயாகவும், அக்காவாகவும், தங்கையாகவும் இருப்பதும் அதே பெண்கள்தான். இதனை மனதில் வைத்து அனைவரும் சரியாக பேசினால் நன்றாக இருக்கும்.
**தெளிவாக இருக்கிறேன்**
பெண்களைப் பற்றி யாராவது அவதூறாகவும், அசிங்கமாகவும் பேசினால் சட்டம் தனது கடமையைச் செய்யும். யாராவது அரசியல் காழ்ப்புணர்ச்சியில் நான் பேசுவதாக நினைத்தால் அதற்கு நான் பொறுப்பாக முடியாது. அந்த எண்ணத்தில் நாம் அரசியலுக்கு வரவில்லை; அதற்கான அவசியமும் இல்லை.
இதே சட்டசபையில் எதிர்க்கட்சியினரால் ஜெயலலிதா மேடம் ஒரு பெண்ணாக எவ்வளவு அவமானங்களை சந்தித்தார் என்பதை நாம் கேள்விப்படுகிறோம். வருங்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் எந்தப் பெண்களுக்கும் நடந்து விடக்கூடாது என்பதில் நான் மிகவும் தெளிவாக இருக்கிறேன்.
**பேச்சுரிமை**
தொழில்நுட்பமும், நாகரிகமும் வளர்ந்து கொண்டிருக்கின்றன. அரசியல் ரீதியாக என்ன வேண்டுமானாலும் கருத்து தெரிவிக்கலாம். அதில் தவறு இல்லை. அதுதான் கருத்துரிமை, பேச்சுரிமை.
**கண்ணாடியை பாருங்கள்!**
மேலும் முதல்வர் விஜய் பேசுகையில், “தவெகவினர் தவறு செய்தாலும் பாரபட்சமின்றி இந்த ஆட்சியில் நடவடிக்கை எடுக்கப்படுகிறது. ஆனால், திமுக ஆட்சியில் திமுகவினர் அனுமதி பெற்ற பிறகே வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. குற்றங்களில் தொடர்புடைய பலர் திமுக ஆட்சியில் காப்பாற்றப்பட்டனர்.
சட்டம்-ஒழுங்கு சீரழிவு பற்றி பேசுவதற்கு முன் திமுகவினர் கண்ணாடியைப் பார்த்துக் கொள்ள வேண்டும். திமுக செய்த தவறுகளை மக்கள் மறந்துவிடவில்லை. தமிழக மக்களின் நினைவாற்றல் மிகவும் வலிமையானது” என்றார்.
**சபாநாயகர் கண்டிப்பு!**
முதல்வர் விஜய் பேசும்போது, அதற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் தொடர்ந்து கோஷம் எழுப்பினர். வெளிநடப்பு செய்யாமல், அவைக்குள் இருந்தபடியே ஆளுக்கு ஒரு பக்கம் கூச்சலிட்டுக் கொண்டிருந்தனர். இந்தச் சூழலில்தான் முதல்வர் விஜய் தனது உரையைத் தொடர்ந்தார்.
இதை தனது இறுதி உரையில் குறிப்பிட்ட சபாநாயகர், திமுகவினரைக் கண்டித்தார். சட்டசபையில் போராட்டத்தில் ஈடுபட்ட திமுகவினரை வெளியேற்றவும் சபாநாயகர் பிரபாகர் உத்தரவிட்டார்.
**திமுக வெளிநடப்பு**
சட்டசபையில் கூச்சல், குழப்பத்தில் ஈடுபட்ட திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவை முன்னவரான அமைச்சர் செங்கோட்டையன் வேண்டுகோள் விடுத்தார்.
இதையடுத்து திமுக எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை முற்றுகையிட்டும், அவையில் தர்ணா செய்தும் போராட்டம் நடத்தினர். தங்களுக்கு பேச வாய்ப்பு வழங்க வேண்டும் என கோரினர்.
அப்போது முதல்வர் விஜய் எழுந்து, அவர்களுக்கு பேச வாய்ப்பு வழங்குங்கள் எனக் கூறினார். இதை ஏற்ற சபாநாயகர், பேச வாய்ப்பு வழங்குவதாக தெரிவித்தார். இதையடுத்து திமுகவினர் எழுந்து அவரவர் இடங்களுக்கு சென்றனர்.
அப்போதும் சில திமுகவினர் எழுந்து நின்று தொடர்ந்து கூச்சல் போட்டுக் கொண்டிருந்தனர். சபாநாயகருடன் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர். இதனால் சபாநாயகர், திமுகவினருக்கு பேச வாய்ப்பு கிடையாது எனக் கூறி, வனத்துறை அமைச்சரை பேச அழைத்தார்.
இதைத்தொடர்ந்து திமுகவினர் அனைவரும் சட்டசபையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.



