257 மில்லியன் போத்தல்கள் விற்பனை - புதிய சாதனை படைத்த Cristaline!!

257 மில்லியன் போத்தல்கள் விற்பனை - புதிய சாதனை படைத்த Cristaline!!

7 புரட்டாசி 2026 திங்கள் 16:40 | பார்வைகள் : 1634


இந்த ஆண்டு நிலவிய கடும் வெப்பமான கோடை காலத்தைத் தொடர்ந்து, Cristaline குடிநீரின் விற்பனை சாதனை அளவை எட்டியுள்ளது. நுகர்வோர் சந்தை ஆய்வு நிறுவனமான Nielsen IQ வெளியிட்டுள்ள 2026ஆம் ஆண்டின் தொடக்கம் முதல் பல்பொருள் அங்காடிகளில் அதிகம் விற்பனையான பொருட்களின் பட்டியலில், Cristaline நிறுவனத்தின் மூன்று தயாரிப்புகள் முதல் மூன்று இடங்களையும் பிடித்துள்ளன. 1.5 லிட்டர் தனிப்போத்தல், 6 x 1.5 லிட்டர் பொதியுடன் வரும் போத்தல்கள் மற்றும் 50 சென்டிலிட்டர் போத்தல் ஆகியவை முதல் மூன்று இடங்களில் உள்ளன.

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில், Cristaline 1.5 லிட்டர் போத்தல் மட்டும் 257 மில்லியன் தடவைகள் விற்பனை நிலையங்களில் ஸ்கேன் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் கடந்த 2025ஆம் ஆண்டு முழுவதும் விற்பனையான 256 மில்லியன் போத்தல்களின் எண்ணிக்கையையே அது ஏற்கனவே கடந்துள்ளது. 6 x 1.5 லிட்டர் பொதியிலான Cristaline 214 மில்லியன் விற்பனையை பதிவு செய்துள்ளது. இதற்கிடையில், அதன் சராசரி விலை மே 5ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 5ஆம் திகதி வரை 1.16 யூரோவிலிருந்து 1.20 யூரோவாக அதிகரித்துள்ளது. 50 சென்டிலிட்டர் போத்தல் 50.9 மில்லியன் தடவைகள் விற்பனையாகி மூன்றாவது இடத்தைப் பிடித்துள்ளது.

கடும் வெப்பம் காரணமாக  போத்தல் குடிநீருக்கான கேள்வி கணிசமாக அதிகரித்ததே இந்த சாதனை விற்பனைக்கு முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது. குறிப்பாக ஜூன் மாதத்தில் ஏற்பட்ட கடுமையான வெப்ப அலை காலத்தில், Intermarché மற்றும் Netto நிறுவனங்களின் குழுமமான Groupement Mousquetaires இன் தலைவர் Thierry Cotillard, தண்ணீர் பொதிகளின் விற்பனை 80 சதவீதம் அதிகரித்ததாக தெரிவித்திருந்தார். குறைந்த விலையில் கிடைக்கும் போத்தல் குடிநீர் வகைகளில் ஒன்றான Cristaline இந்த அதிகரித்த கேள்வியால் பெரிதும் பயனடைந்துள்ளது. அதேவேளை, Volvic நிறுவனத்தின் 1.5 லிட்டர் போத்தலும் 45.6 மில்லியன் விற்பனையுடன் பட்டியலில் ஐந்தாவது அதிகம் விற்பனையான பொருளாக இடம்பெற்றுள்ளது.

தொடர்ந்து படிக்க