மதுராந்தகம், தாராபுரம் தொகுதிகளுக்கு இடைத்தேர்தல்
8 புரட்டாசி 2026 செவ்வாய் 05:14 | பார்வைகள் : 199
தமிழகத்தில் காலியாக உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளில் மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய 2 தொகுதிகளுக்கு மட்டும் இடைத்தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதன்படி, வரும் அக்டோபர் 6-ஆம் தேதி இந்த இரு தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.
திருச்சி கிழக்கு, அம்பாசமுத்திரம், விராலிமலை, பெருந்துறை மற்றும் கரூர் ஆகிய 5 தொகுதிகளில் தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், இந்த தொகுதிகளுக்கு தற்போது இடைத்தேர்தல் அறிவிக்கப்படவில்லை.
### தேர்தல் அட்டவணை
வேட்பு மனு தாக்கல் தொடக்கம்: செப்டம்பர் 9
வேட்பு மனு தாக்கல் நிறைவு: செப்டம்பர் 16
வேட்பு மனுக்கள் பரிசீலனை: செப்டம்பர் 17
வேட்பு மனுக்களை திரும்பப் பெற கடைசி நாள்: செப்டம்பர் 19
வாக்குப்பதிவு: அக்டோபர் 6
வாக்கு எண்ணிக்கை: அக்டோபர் 9
மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட்டு எம்.எல்.ஏ.க்களாக வெற்றி பெற்றனர். பின்னர் இருவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துவிட்டு தவெகவில் இணைந்ததால், இந்த இரு தொகுதிகளும் காலியானதாக அறிவிக்கப்பட்டன.
இதனால், மதுராந்தகம் தொகுதியில் மரகதம் குமரவேலும், தாராபுரம் தொகுதியில் சத்யபாமாவும் தவெக சார்பில் வேட்பாளர்களாக நிறுத்தப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
### தவெகவுக்கு நெருக்கடி
தமிழகத்தில் த.வெ.க. அரசு அமைந்து 3 மாதங்களே கடந்துள்ள நிலையில், கூட்டணியில் உள்ள கட்சிகள் பல்வேறு விவகாரங்களில் அரசுக்கு நெருக்கடி கொடுக்கத் தொடங்கியுள்ளன.
இந்திய கம்யூனிஸ்டு கட்சி விலைவாசி உயர்வைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி தலைமைச் செயலாளருக்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சியும், அரசின் கொள்கை முடிவுகளில் தங்களது கோரிக்கைகளுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டும் என நெருக்கடி கொடுத்து வருகிறது.
இதற்கிடையே, காங்கிரஸ் கட்சியும் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக ஏற்காவிட்டால் அமைச்சரவையில் இருந்து வெளியேறுவோம் என்று மிரட்டி வருவதாக கூறப்படுகிறது. கூட்டணி கட்சிகளின் இந்த நிலைப்பாடுகள் த.வெ.க. அரசுக்கு புதிய தலைவலியை ஏற்படுத்தியுள்ளன.
### இடைத்தேர்தல்
ஏற்கனவே எதிர்க்கட்சிகளான தி.மு.க., அ.தி.மு.க. மற்றும் பா.ஜ.க. ஆகியவை த.வெ.க. அரசு எப்போது கவிழும் என எதிர்பார்த்துக் கொண்டிருக்கும் நிலையில், கூட்டணி கட்சிகளின் நிலைப்பாடுகளும் அரசுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளன.
ஆட்சியில் தொடர்ந்து நீடிக்க வேண்டும் என்றால், தமிழகத்தில் காலியாக உள்ள 7 தொகுதிகளிலும் இடைத்தேர்தலில் வெற்றி பெற வேண்டிய கட்டாயம் த.வெ.க. அரசுக்கு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடைசியாக கரூர் தொகுதி கடந்த ஜூன் 30-ஆம் தேதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. தொகுதி காலியானதில் இருந்து 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்த வேண்டும் என்ற விதிமுறை உள்ளது. ஆனால், திருச்சி கிழக்கு, பெருந்துறை, விராலிமலை, கரூர் மற்றும் அம்பாசமுத்திரம் ஆகிய தொகுதிகளில் வெற்றி பெற்றவர்கள் மீது தேர்தல் தொடர்பான வழக்குகள் நிலுவையில் இருப்பதால், குறிப்பிட்ட காலத்திற்குள் அங்கு இடைத்தேர்தல் நடைபெறாது எனத் தெரியவந்துள்ளது.
மேற்கண்ட 5 தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கான தடை செப்டம்பர் 8-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
மதுராந்தகம் மற்றும் தாராபுரம் தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்துவதற்கு எந்தவிதமான சிக்கலும் இல்லாததால், இந்த இரு தொகுதிகளுக்கு மட்டும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த இரு தொகுதிகளிலும் வெற்றி பெற்று தனது செல்வாக்கை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் த.வெ.க. உள்ளது. அதேநேரத்தில், த.வெ.க.வை வீழ்த்த தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளும் பல்வேறு வியூகங்களை வகுத்து வருகின்றன.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளதால், மதுராந்தகம் மற்றும் தாராபுரம் ஆகிய இரு தொகுதிகளிலும் தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ளன.



